உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு முன் ஆஜராக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா அழைக்கப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா குழு முன் ஆஜராகவுள்ளார். பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழு கடந்த புதன்கிழமை தமது சாட்சி விசாரணைகளை ஆரம்பித்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளின்போது ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானை கைது செய்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி பிறப்பித்த பிடியாணை மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளராக அப்போது கடமையாற்றிய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வாவிடம் இதன் போது விளக்கம் கோரப்படவுள்ளது.

