இலங்கை பாதுகாப்பு நிலைவரம் வழமைக்குத் திரும்பவில்லை – சீனா

299 0

இலங்கையில் பாதுகாப்பு நிலைவரம் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை என்று சீனா கூறியிருக்கின்றது. கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இலங்கைக்கான அதன் பயண அறிவுறுத்தலை மேலும் திருத்தம் செய்து ‘முன்னெச்சரிக்கையாகச் செயற்படவேண்டும்” என்று சீனர்களை அறிவுறுத்தியிருக்கின்றது என்று சீன அரச செய்தி நிறுவனமான சின் ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து தீவிரவாத சக்திகளுக்கு எதிராகக் கடுமையான, பரந்தளவிலான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் கடைத்தொகுதிகள் போன்ற பொதுஇடங்களில் பாதுகாப்புக் கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கும் கொழும்புத் தூதரகம், பாதுகாப்பு நிலைவரம் இலங்கையில் இன்னமும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. திருத்தியமைக்கப்பட்ட இந்தப் பயண அறிவுறுத்தல் ஜுன் 21 வரை நடைமுறையிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.