தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான பிம்ஸ்டெக் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி(காணொளி)

398 0

mythiriபொருளாதார அபிவிருத்திக்கான கூட்டுமுயற்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான ஒரு பிம்ஸ்டெக் நிலையத்தைத் ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் கோவா நகரில் நேற்று இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

இலங்கையை அடுத்தகட்ட அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வதற்கு அறிவின் அடிப்படையிலமைந்த, போட்டித்தன்மைமிக்க, சமூக சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக உலகுடன் தொடர்புபடுவது எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிம்ஸ்டெக் அமைப்பின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.

எமது இந்த ஒன்றுகூடலானது பிம்ஸ்டெக் நோக்கங்களை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்வதில் எமக்குள்ள ஒருமித்த நோக்கத்தையும் ஐக்கிய உணர்வையும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிம்ஸ்டெக் மாநாடுகள் பிராந்தியத்தின் சுபீட்சத்தை மையப்படுத்திய பல்வேறு பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.

எவ்வாறானபோதும் பிராந்திய கூட்டுறவுக்கான எல்லா வாய்ப்புகளையும் அடைவதில் நாம் இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. எனவே நாம் எமது பொருளாதார, தொழிநுட்ப கூட்டுறவின் ஊடாக அதன் நன்மைகளை பிராந்திய மக்களுக்கு பெற்றுக்கொடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அறிவுப் பரிமாற்றம், தொழிநுட்பத்திற்கான அதிகரித்த பிரவேசம், இயல்திறன்விருத்தி, வர்த்தக, முதலீட்டு விஸ்தரிப்பு என்பவற்றை இனியும் தாமதிக்க முடியாது.

எனவே அர்த்தபூர்வமான, பெறுபேறுகளின் அடிப்படையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு எமது பிராந்திய கூட்டுறவைப் பலப்படுத்துவதற்கான மார்க்கங்ளை நாம் காண வேண்டும்.

பிராந்திய கூட்டுறவுக்கும் பிராந்தியங்களுக்கிடையிலான கூட்டுறவுக்குமான எனது அரசாங்கத்தின் அணுகுமுறை எவரையும் பகைத்துக்கொள்ளாத, எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணும் அடிப்படையிலானதாகும். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் இன்றைய உலகில் எந்தவொரு நாடோ அல்லது மக்கள் குழுமமோ தனித்திருந்து அபிவிருத்தியடைய முடியாது. அதேபோன்று எந்தவொரு நாட்டையும் மக்களையும் முக்கியமற்றதாக அல்லது பொருத்தமற்றதாகக் கருதவும் முடியாது.

நாம் எமது மக்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சமாதானத்தை நிலைப்படுத்த வேண்டும். இந்த பின்புலத்தில் நாம் பயங்கரவாதத்தை அதன் எல்லா வடிவங்களுடனும் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

பரஸ்பர கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சமாகும். எமது மக்களுக்கு உச்சபயன் கிடைக்கும் வகையில் கூட்டுறவு உணர்வுடன் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கூட்டுறவின் அடிப்படையிலான பொதுவாக அடைந்துகொள்ளும் நன்மைகளையே நாம் பெரிதும் நம்புகிறோம். பரஸ்பர நன்மைகளை அடைந்துகொள்வதில் வர்த்தக மற்றும் பொருளாதார சந்தர்ப்பங்களை ஒத்துழைப்புடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிம்ஸ்டெக் அமைப்பை பலப்படுத்துகின்ற அதேநேரம், சார்க் மற்றும் ஆசியான் அமைப்புகளுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் நாம் கண்டறிய வேண்டும்.

இவ்வமைப்பின் அடிப்படை எதிர்பார்ப்புகளில் ஒன்றான பிராந்தியத்திற்கிடையிலான வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு எமது அமைப்பை மீளொழுங்குபடுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

பொருளாதார அபிவிருத்திக்கான எமது கூட்டுமுயற்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான ஒரு பிம்ஸ்டெக் நிலையத்தைத் தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

இலங்கையை அடுத்தகட்ட அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வதற்கு அறிவின் அடிப்படையிலமைந்த, போட்டித்தன்மைமிக்க, சமூக சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக உலகுடன் தொடர்புபடுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடந்த வருடம் தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் மேம்படுத்துவதற்காக எனது நாடு எடுத்துள்ள நடவடிக்கைகளின் வெற்றிக்காக உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.