இலங்கை இராணுவத்தினர் அணியும் சீருடைகளுடன் இரண்டு அடி உயரமான கஞ்சாச் செடியொன்றையும் எடுத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பண்டாரவளைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன ஜயதிலக்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பண்டாரவளை – ஹப்புத்தளை வழியில் “ஒத்தகடை” என்ற இடத்தில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது கடதாசியினால் சூட்சுமமாக சுற்றப்பட்ட இரண்டு அடி உயரமான கஞ்சாச் செடியொன்றை அவரிடமிருந்து மீட்டதுடன் அவரது உடைப்பையிலிருந்த இலங்கை இராணுவத்தினர் அணியும் சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
இதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட சீருடைகளில் இரு சட்டைகள், இரு ரிசேட்கள் இரு நீள் காட்சட்டைகள் இராணுவத்தினர் இடுப்பில் அணியும் பைகள் இரண்டு ஆகியனவும் அடங்கியிருந்தன.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸார் தெரிவித்தனர்.

