தமிழினியின் பெயரால் நடக்கிற மோசடி! புகழேந்தி தங்கராஜ்

319 0

tamilini2002ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்வில் தமிழினி உரையாற்றியபோது வீரசிங்கம் மண்டபம் நிரம்பி வழிந்தது. தமிழீழத்துக்காக நடந்துவந்த போராட்டம் விடுதலைப்புலிகளின் போராட்டம் மட்டுமில்லை அது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் போராட்டம் – என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார் தமிழினி.

‘மக்களின் முழுமையான ஆதரவு இருப்பதால்தான் 25 ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டம் தொய்வின்றித் தொடர்கிறது’ என்றார். மக்கள் பங்கேற்பில்லாமல் தொடர்ந்து 25 ஆண்டுகள் போராடுவது சாத்தியமேயில்லை என்பதை விளக்கினார்.

தமிழினியின் தோற்றத்தில் கூனிக்குறுகிக் கிடப்பவர்களின் முதுகெலும்பைக்கூட நிமிர்த்து விடக்கூடிய ஒரு கம்பீரத்தைப் பார்க்க முடியும். அதே கம்பீரம் அவர் ஆற்றிய உரையிலும் இருந்தது.

தாங்கள் நேசிக்கிற ஒரு விடுதலை இயக்கத்தில் தாங்களும் பங்கெடுக்க ஈழத்துச் சகோதரிகள் முன்வந்தபோதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடையைப் பெருமிதத்துடன் அணிந்தபோதே காலம்காலமாக அங்கே காலூன்றியிருந்த பெண் குறித்த கருத்தியல் தகர்த்தெறியப்பட்டது. யாழ் சமூகச் சூழலில் அத்தகைய மாற்றம் அரிதினும் அரிது.

தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மனமார நேசித்தவர்களே கூட தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் இயக்கத்தில் சேருவதை விரும்பவில்லை. இயக்கத்திலிருந்து அவர்களை வெளியேற்றும்படி கேட்டுக் கொண்டதோடு நின்றுவிடாமல் புலிகளின் பயிற்சி முகாமுக்குள் நுழைந்து பெண் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு போனதெல்லாம் நடந்திருக்கிறது. அந்த இறுக்கத்தைத்தான் தமிழினி போன்றவர்கள் உடைத்தனர்.

வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு ஆண்களுக்கு இணையான தலைமைத்துவத்தை வழங்கி கௌரவித்தது புலிகளின் தலைமை. அப்படித்தான் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு இணையாக மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளராக்கப்பட்டார் தமிழினி.

சுமார் 2 வாரம் தினந்தோறும்தமிழினியைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்த ஒரு காலக்கட்டத்தில் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அவரது அறிவையும் தெளிவையும் கண்டு வியந்திருக்கிறேன்.

புலிகளைப் போற்றும் திரைப்படம் – என்கிற குற்றச்சாட்டுடன் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட எனது ‘காற்றுக்கென்ன வேலி’ திரைப்படம் 2001ல் அந்தத் தடையை உடைத்து வெளியானது. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூட முடியாத அளவுக்கு அப்போது ஒரு அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது. ‘காற்றுக்கென்ன வேலி’யை ஈழத்தில் புலிகள் தடைசெய்திருக்கிறார்கள் என்கிற தகவல்தான் அது.

யாரைப் போற்றுவதாக இங்கேயிருக்கிற சென்சார் போர்டு குற்றஞ்சாட்டியதோ அவர்களே அதைத் தடை செய்திருக்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை என்னால்! யாரிடம் போய் முறையிடுவது என்றும் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளனாக மூத்த தலைவர் பழ.நெடுமாறனுடன் நெருங்கிப் பழகியிருந்தேன் என்பதால் புலிகளின் நிஜமான நண்பர்களில் ஒருவரான அவரிடம்போய் முறையிட்டேன்.

பழ.நெடுமாறன் தான் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றார். அதன்பிறகே முக்கியத் தலைவர்களும் தளபதிகளும் படத்தைப் பார்த்து பிழையான தடையை நீக்கினர். வன்னி மண்ணில் காற்றுக்கென்ன வேலி பல பகுதிகளில் இயக்கத்தாலேயே திரையிடப் பட்டது.

காற்றுக்கென்ன வேலி-க்கு அமைப்பும் தடை விதித்ததால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து தமிழினியிடம் ஒருமுறை குறிப்பிட நேர்ந்தது. அது காற்றுக்கென்ன வேலி இரண்டாம் பகுதியின் திரைக்கதை அமைப்பில் அவரும் பங்கெடுத்த நேரம். ‘நாங்கள் தயாரிக்கிறோம் இதை’ என்று தோழர்கள் என்னைத் தட்டிக் கொடுத்த நேரம்.

வன்னி மண்ணில் தமிழினிதான் எனது சங்கப்பலகை. திரைக்கதையில் செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தினந்தோறும் அவரிடம் எடுத்துச் சொல்வேன். குறுக்கிட்டு அவர் கேட்கிற கேள்விகள் அதை மேலும்மேலும் செம்மைப்படுத்தின.

அப்படியொரு சந்திப்பின் போது காற்றுக்கென்ன வேலி தடை தொடர்பான எனது வேதனையை அவரிடம் சொன்னேன். போரில் படுகாயமடைந்து தமிழகம் வந்திருக்கும் பெண் போராளி மணிமேகலைக்கும் சிகிச்சை தருகிற டாக்டர் சுபாஷ் சந்திரபோஸுக்கும் இடையிலான புரிதலுக்கும் பரிவுக்கும் ‘காதல்’ என்று அர்த்தம் கற்பித்துக்கொண்டு படத்தை ஈழத்தில் தடைசெய்தது நியாயமில்லை என்றேன். ‘காதலாகவே இருந்தால் கூட அதைத் தடை செய்திருக்கக் கூடாது… அது எமக்கான படம்’ என்றார் தமிழினி. இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்.

காற்றுக்கென்னவேலி – இரண்டாம் பகுதியை மணிமேகலை தலைமையிலான பெண் கடற்புலிகளின் போர்வெற்றி ஒன்றிலிருந்து தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். தங்கள் தாயகத்தின் பரந்த கடல்வெளியைப் பாதுகாப்பதில் ராப்பகலாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண் கடற்புலிகளை முதல்முறையாகச் சந்தித்தபோது எழுந்த வியப்பில் விழுந்த விதை அது.

தமிழினியிடம் அதைச் சொன்னதும் எந்த ஆண்டில் அது நடக்கிறது என்று கேட்டார். ஆண்டைக் குறிப்பிட்டதும் அதுதொடர்பாக விரிவாகப் பேசத் தொடங்கிவிட்டார். ஒரு சர்வசாதாரணக் கலைஞனான என்னுடைய கற்பனையை தமிழினிதான் துல்லியமாகச் செதுக்கினார்.

‘சென்னையிலிருந்து உதவி இயக்குநர்களைக் கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டாம்…. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று தமிழினியும் அவருடைய தோழியரும் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அதை நான் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அது ஒரு மறைமுக உத்தரவு. அப்படி உத்தரவிடுவதற்கான சகல தகுதியும் இந்த இனத்தின் அடையாளமான எங்கள் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு இருந்தது.

மணலாற்றில் இந்தியப் படைகளின் முற்றுகையில் இருந்த மரணத் தருவாயில் கூட ஆண்களுக்குச் சமமாகப் பெண்களைக் கருதியவர் பிரபாகரன். விடுதலைப் போராட்டம் தன்னோடு முடிந்துவிடாதென்று சொன்னதுடன் நின்றுவிடாமல் ‘ஒரு பிரபாகரனோ பிரபாகரியோ அந்தப் போராட்டத்தைத் தொடர்வார்கள்’ என்றார் நம்பிக்கையுடன்!

அப்படியொரு மனிதன் குறித்து தமிழினியின் நூல் விமர்சிப்பதாக வெளிவந்த செய்திகளை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருந்தேன். சரியான தருணத்தில் அதுகுறித்து எழுதவேண்டும் என்று நினைத்தேன். ‘சொந்த மக்களுக்கு விடுதலைப் புலிகள் செய்த துரோகம்’ என்கிற திருவாளர் ஹிந்துவின் விஷம்தோய்ந்த வார்த்தைகள் அதற்கான வாய்ப்பை இப்போது வழங்கியிருக்கின்றன.

உயிருக்குப் போராடிய கடைசி நொடிவரை இப்படியொரு கருத்தை எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை தமிழினி. அவரது முகநூலில் கூட அதற்கான அறிகுறி இல்லை. அவர் இறந்த பிறகே இப்படியொரு நூல் அவரது ‘கணவர்’ ஜெயக்குமரன் என்பவர் வாயிலாக வெளிவருகிறது. சிங்களத்திலும் அதை வெளிக்கொண்டு வருகிறார் அவர். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது ஒவ்வொன்றும்!

‘இறப்பதற்கு முன் இந்த நூலை எழுதுவதில் தமிழினி முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்ததால் இதுகுறித்து அவரால் முன்னதாகவே பேச முடியவில்லை…. சிங்களத்திலும் நூலைக் கொண்டுவருவதென்கிற முடிவை தமிழினியின் சம்மதத்துடன் தான் எடுத்தேன்’ என்றெல்லாம் இப்போது பேசுகிறார் ஜெயக்குமரன்.

நான் நேசித்த ஒரு சகோதரியின் கணவரென்பதால் ஜெயக்குமரன் சொல்வதெல்லாம் உண்மை என்றே நம்ப விரும்புகிறேன். ஆனால் நாம் ஒன்று நினைக்க ஜெயக்குமரன் வேறுமாதிரி நினைக்கிறார். தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். ஒரு கதாநாயகன் காமெடிபீஸாக மாறுகிற கதை இது.

தமிழினியின் நூல் – என்று ஜெயக்குமரன் சொல்கிற நூலில் சிறையிலும் புனர்வாழ்வு முகாமிலும் தமிழினி கொடுமைகளை அனுபவித்ததாக பெரிய அளவிலான புகார் எதுவும் இல்லை. தமிழினியை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்திருந்தார்கள் – என்று மட்டும்தான் அதில் எழுதப்படவில்லை.

இதைப்பற்றிய ஜெயக்குமரனின் கருத்து அவர் யாரென்பதை அடையாளம் காட்டுகிறது.

‘தமிழினி இருந்தது வவுனியாவிலுள்ள ஒரு தடுப்புமுகாமில்! அந்த முகாம் பற்றித்தான் அவர் பேச முடியும்….. மற்ற முகாம்களில் போராளிகள் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அது தமிழினிக்குத் தெரியாதிருந்திருக்கும்…… வவுனியா முகாமில் இருந்த முறைகள் தான் தமிழினியால் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அதை மோசமாகச் சித்தரித்து தமிழினி நல்ல பெயர் வாங்கியிருக்கலாம்’ என்பது ஜெயக்குமரனின் சாதுர்யமான வாக்குமூலம்.

இந்த வாக்குமூலம்தான் புத்தகத்தின் நதிமூலம் ரிஷிமூலம் குறித்த ஐயங்களை வலுப்படுத்துகிறது. இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போட்டு யாரிடம் நல்ல பெயர் வாங்க ஜெயக்குமரன் முயல்கிறார் – என்கிற கேள்வியை எழுப்புகிறது.

ஓர் இரும்புப் பெண்மணி போலவே தோற்றமளித்தவர் தமிழினி. உறுதியான உடல்வாகு உள்ளவர்களுக்கு புற்றுநோய் வரவே கூடாது – என்றெல்லாம் சட்டம் எதுவும் இல்லைதான். என்றாலும் ‘புனர்வாழ்வு’ என்கிற சந்தேகத்துக்குரிய நடவடிக்கைக்குப் பிறகே அவர் புற்றுநோய்க்கு உள்ளானது தான் ஐயங்களை எழுப்பியது.

தமிழினிக்குப் புற்றுநோய் இருப்பது எப்போது கண்டறியப்பட்டது நோய்க்கான காரணங்களை மருத்துவர்கள் தெரிவித்தார்களா என்னென்ன சிகிச்சை தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதா அந்த மருத்துவ உதவிகள் அவருக்குத் வழங்கப்பட்டதா – என்றெல்லாம் நாம்கூட கேள்வி எழுப்பினோம். இந்தக் கேள்விகளில் எதையும் ஜெயக்குமரன் எழுப்பவுமில்லைஇ இதற்கான பதில்களைப் பெற முயலவுமில்லை.

தமிழினி அடைத்துவைக்கப் பட்டிருந்த ராணுவ முகாமுக்கு நற்சான்றிதழ் வழங்குவதற்கே நேரம் போதவில்லை ஜெயக்குமரனுக்கு! அந்தச் சகோதரியின் மரணத்துக்கு நியாயம் கேட்க எப்படி நேரமிருக்கும்?

தடுப்புக்காவலில் இருந்த சமயத்தில் தன்னைச் சந்தித்த பலரிடம் தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாக மனம் நொந்து கூறியிருக்கிறார் தமிழினி. அதற்கு நேர்மாறாக ‘வவுனியா முகாம் – புத்தபிரானின் நேரடி ஏஜென்டுகளாலேயே நிர்வகிக்கப்பட்டது’ என்கிற தொனியில் முணுமுணுக்கிறார் ஜெயக்குமரன்.

தடுப்பு முகாம் கொடுமைகள் குறித்து தமிழினி வேதனையோடு குறிப்பிட்டதைக் கேட்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதை ஜெயக்குமரன் மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு சித்திரவதை முகாமுக்கு நற்சான்று கொடுக்கும் ஜெயக்குமரனின் இந்த அழுகல் ஆட்டம் அவரது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் பித்தலாட்டமாக்கி விடுகிறது.

வன்னியில் பல்வேறு சோதனைகளுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருக்கும் போராளிகளின் நிலையைப் பெரிதுபடுத்திக் காட்டி இலங்கை அரசு செய்த கொடூரமான இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிற திருப்பணியில் எடுபிடிகள் பலர் ஏற்கெனவே இறங்கியிருக்கின்றனர். ஜெயக்குமரனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை!

போராளிகளின் அவல நிலையைச் சுட்டிக்காட்டவே கூடாது என்று நினைப்பவனில்லை நான். அவர்களது அவல நிலையைப் பிரச்சாரம் செய்யாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளை சத்தம் போடாமல் செய்வதுதான் மனிதத்தன்மை என்று நினைக்கிறேன். புலம்பெயர் உறவுகள் பலர் அந்த வேலையை அந்தரங்கசுத்தியோடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமரனுக்கு அது தெரியுமா தெரியாதா?

இனப்படுகொலைக்கு நீதி கேட்பதென்பது நச்சு ஆயுதங்களால் நசுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமில்லாமல் போராளிகளுக்கும் சேர்த்தே நியாயம் கேட்பதுதான்!

நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்க மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்கிற தோழன் ஒரு பெறுமதியான நூலை மிகுந்த முயற்சியின் பின் கொண்டுவந்தான். சிங்கள மக்களும் அதைப் படித்தால்தான் தங்கள் அரசின் கோரமுகத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்பார்கள் என்று நினைத்த பிரபாகரன் அந்த நூலை சிங்களத்திலும் கொண்டு வந்தார். ஜெயக்குமரன் எந்த நூலை சிங்களத்தில் கொண்டுவருகிறார்? தமிழினியின் பெயரால் நடக்கிற இந்த மோசடி மூலம் சிங்கள மக்களிடம் யாருக்கு நீதி கேட்கப் பார்க்கிறார்?

முப்பதாண்டுக் கால ஈழ விடுதலைப் போராட்டம் தமிழினி சொன்னதைப் போல ஒரு மக்கள் போராட்டம். அதனால்தான் ஒரு இனப்படுகொலை மூலம் மிருகத்தனமாக நசுக்கப்பட்டது. இந்த உண்மையை ஜெயக்குமரன் உணரவேயில்லையா?

இன்றைக்கும் வடகிழக்கிலிருக்கும் ராணுவ முகாம்களை அகற்ற இலங்கை மறுப்பதற்குக் காரணம் சட்ட விரோதமாகக் கொல்லப்பட்டு ஒவ்வொரு முகாமின் கீழும் புதைக்கப்பட்டிருக்கிற போராளிகள் மற்றும் பொதுமக்களின் உடல்கள்தான்! ராணுவ முகாம்களை அகற்றினால் இனப்படுகொலை அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால்தான் நகர மறுக்கிறது இலங்கை. ராஜபக்சவின் கூட்டாளிகளுக்குக் கூட புரிகிற இந்த உண்மை ‘வவுனியா முகாம்தான் புத்த கயை’ என்று சான்றிதழ் கொடுக்கிற ஜெயக்குமரனுக்குப் புரியவேயில்லையா?

கடைசி கடைசியாக பதில் சொல்வதற்கு எளிதான ஒரே ஒரு கேள்வியை ஜெயக்குமரனிடம் கேட்க விரும்புகிறேன்.

விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தமிழினியை வடமாகாண முதல்வர் தேர்தலில் நிறுத்த அரசு முயற்சித்ததையும் அந்தத் துரோகத்துக்கு உடன்பட அவர் மறுத்ததையும் ஜெயக்குமரன் மறுக்க முடியாது. அந்த பேரம் நடந்தபோது தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா இல்லையா? இந்தக் கேள்விக்கான பதில் ஒரு முக்கியமான சந்தேகத்தைத் தீர்க்கும் என்பதாலேயே இதைக் கேட்கிறேன்.

தமிழினி உயிருடனிருந்தபோது விக்னேஸ்வரனுக்கு எதிராக அவரை நிறுத்தி தமிழினத்தையும் போராளிகளையும் துண்டுதுண்டாகச் சிதைக்கப்பார்த்தார்கள். தமிழினி இறந்தபிறகு அதை ஒரு போலிப் புத்தகத்தின் மூலம் சாதிக்கப் பார்க்கிறார்கள் போலிப் புத்தர்கள். இதை அறிந்திருப்பதால்தான் இனப்படுகொலையை மூடி மறைக்க முயலும் ஹிந்துக்களும் ராம்களும் இந்த புத்தக மோசடியைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?