குருநாகல் வைத்தியர் விவகாரம் குறித்து மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும்-சம்பிக்க

203 0

தற்போது குருநாகல் வைத்தியர் குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை உடனடியாக தீர்க்கவில்லை என்றால் எதிர்காலத்தில் அனைத்து வைத்தியர்களையும் சந்தேக கண்ணோட்டத்திலேயே மக்கள் பார்ப்பார்களென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போதுள்ள சூழ்நிலையில் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பொறுப்பை மருத்துவ சபையிடம் ஒப்படைப்பதே சிறந்ததாகும்.

இதேவேளை சத்திரசிகிச்சையினை தனியொரு வைத்தியரினால் மேற்கொள்ள முடியாதென்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ளும்போது மேலதிக வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஆகியோர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆகையால் இவ்விடயத்தில் உண்மையை கண்டறிவது மிகவும் அவசியமாகவுள்ளது.

குறித்த விவகாரத்தில் அறிவியல் ரீதியிலான விசாரணையே தேவைப்படுகின்றது. இதனால் மருத்துவ சபையிடம் ஒப்படைப்பதே நல்லது.

குறித்த மருத்துவ சபையினுடைய விசாரணையின் முடிவில் வைத்தியர் மொஹமட் சாஃபி குற்றம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டால் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” என சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.