இனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித

243 0

பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் அதன் பின்னர் இடம்பெற்ற இனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில், “பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று சில வாரங்களில் இனவாத தாக்குதல் இடம்பெறுகின்றது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

30 வருட யுத்த காலத்திலும் இந்தளவு அச்சம் இருக்கவில்லை. அடிப்படைவாதத்தை பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே இருக்கின்றனர்.

பயங்கரவாத தாக்குதலுடன் இடம்பெற்ற இனவாத தாக்குதல் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். இந்த இனவாத தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்று அந்த பிரதேச மக்களுக்குத் தெரியும்.

பிரதேச அரசியல்வாதிகளே இதற்குப் பின்னால் இருப்பதாக கார்தினால் மல்கம் ரன்ஜித் தெரிவித்திருக்கின்றார். நல்லிணக்கம் தொடர்பாக வெளிப்படையாகக் கதைப்பவர்கள் மறைமுகமாக இனவாதத்தைத் தூண்டிவருகின்றனர்.

அதனால் நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

அதேபோன்று இனவாதம் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. எனவே பயங்கரவாத மற்றும் இனவாத தாக்குதல்களைத் தடுக்க முடியாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது” என தெரிவித்தார்.