பிரதமரின் சூழ்ச்சியே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்-எஸ்.பி

330 0

.

ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம இணைந்து செய்த சூழ்ச்சியின் விளைவாகவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, இதற்கு தமது தரப்பினர் ஒருபோதும் ஒத்துழைப்புக்களை வழங்கப்போவதில்லை என்றும் இது ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் ஒரு செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி எனும் வகையில், நாம் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம்.

அநுரகுமார திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரதிபலனாகவே இத்தீர்மானம் நாடாளுமன்றுக்கு வரவுள்ளது. மலிக் சமரவிக்ரம இதற்காக அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சலுகைகளையும் வழங்கியிருக்கவும் கூடும்.

ரிஷாட் பதியுதீனின் பிரச்சினையை அடுத்து தீவிரவாதத்துக்கு எதிராக செயற்பட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று முன்வந்துள்ளனர்.

நிரோஷன் பெரேரா உள்ளிட்ட பலர் இந்த தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்கிய, அவர்களை பாதுகாத்து, அவர்களுக்கு சலுகைகளை வழங்கிய, அவர்களை பாதுகாத்த மற்றும் அவர்களின் பணத்தை பயன்படுத்திய ரிஷாட் பதியுதீன் போன்ற நபர்களுக்கு எதிராக செயற்பட முன்வந்துள்ளார்கள்.

இவ்வாறு தீவிரவாதத்துக்கு பக்கபலமாக செயற்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒருங்கிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு பிளவடையவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றுவதே பிரதான நோக்கமாக இருக்கிறது.

இதனை தடுக்கவும், இதற்கு ஜனாதிபதியின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும்தான் ஜே.வி.பியின் ஊடாக இந்தத் தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியாகவும் ஒருங்கிணைந்த எதிரணி என்ற வகையிலும், ஜே.வி.பியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு முழுமையான எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது முற்றுமுழுதாக பிரதமர்- மலிக் மற்றும் அநுரவின் சூழ்ச்சியால் கொண்டுவரப்படும் ஒரு பிரேரணை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.