மணிமண்டபம்- பூமிபூஜையுடன் இன்று பணிகள் தொடங்கின

265 0

201610141004011797_abdul-kalam-samadhi-campus-rs-15-crore-for-construction-work_secvpfராமேசுவரம் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம், ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ளது. அவரது சமாதி உள்ள இந்த நினைவிடத்தில் மணிமண்டபம், அறிவு சார் மையம் போன்றவை அமைக்க இந்திய ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் திட்டமிட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினமாக கடந்த ஜூலை 27-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பல்வேறு ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. அப்துல்கலாமின் 85-வது பிறந்த நாளான இன்று (சனிக்கிழமை) இந்த பணிகள் தொடங்கின.

அப்துல்கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக் காயர் இந்த பணியை தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி வி.கே.சிங், அப்துல் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாப்தீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன் சேக்சலீம் மற்றும் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.

27 ஆயிரம் சதுரமீட்டர் நிலப்பரப்பில் அமைய உள்ள மணிமண்டப பணிகளை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2017) ஜூலை 27-ந்தேதி கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தன்று மணிமண்டபத்தை திறக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன.

இந்த பணி முடிந்ததும் அறிவுசார் மையம், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கண்காட்சி போன்றவை அமைக்கப்பட உள்ளன. கலாமின் பிறந்த நாளான இன்று ஏராளமான குழந்தைகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தோர் நினைவிடம் வந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.