தொடர்ந்து 2-வது நாளாக கமல்ஹாசன் பிரசாரம் ரத்து!

306 0

தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்து பயங்கரவாதி’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது பிரசாரம் நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கமல்ஹாசன் சர்ச்சை கருத்து
இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது.அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடும் எதிர்ப்பு
கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி. மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.
மத கலவரத்தை தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேச்சு அமைந்துள்ளதாக கூறி, அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்; அத்துடன் அவர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார்.
2-வது நாள் பிரசாரம் ரத்து
இப்படி எதிர்ப்பு வலுத்து வருகிற நிலையில், அரவக் குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். இது அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில் ஓட்டப் பிடாரம் தொகுதியில் நேற்று மேற்கொள்ள இருந்த பிரசாரம் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு பெற்ற வளரும் தமிழகம் கட்சி வேட்பாளர் எம். காந்தியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று மாலையில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டு விட்டது.
உருவபொம்மை எரிப்பு
பிரசாரம் செய்வதற்கு அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி கிடைக்காததால்தான் கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் வடசேரியில் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடந்தது.
வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு
இதற்கு இடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிடப் போவதாக பல்வேறு இந்து அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், 10 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டில் கமல்ஹாசனுக்கு எதிராக வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு வழக்கை தொடுத்துள்ளார். மேலும், அவர் டெல்லி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வில் ஆஜராகி, தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை புதன்கிழமையன்று (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்து சேனா அமைப்பு சார்பில் அதன் தலைவர் விஷ்ணுகுப்தா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், “கமல்ஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் பயங்கரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புபடுத்தி பேசியதின் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமையன்று (நாளை) பாட்டியாலா ஹவுஸ் கோட்டில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிலும் வழக்கு
கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.