பயங்கரவாதத் தாக்குதல்களைத் தவிர்க்க புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் முக்கியமானது-அமெரிக்கத் தூதுவர்

236 0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு நட்பு நாடுகளுக்கிடையே புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் முக்கியமான காரணியாகும் என்று அமெரிக்கத் தூதுவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார்.

குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுடனான ஒருமைப்பாட்டையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதற்காக ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்தார்.

இதன்போது கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியான அமெரிக்கப் பிரஜைகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கத் தூதுவரிடம் வெளிப்படுத்தியதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை தூதுவர் தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9/11 தாக்குதல் அமெரிக்காவிற்கு பல பாடங்களைக் கற்றுத்தந்ததாகவும்,அமெரிக்கப் புலனாய்வு சேவைகள் பலப்படுத்தப்பட்டதாகவும் தூதுவர் டெப்லிட்ஸ் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.