தமிழினப் படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுக்கவே மாணவர்கள் கைது!-சிவாஜி

312 0

தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுப்பதற்காகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படும் பட்சத்தில் அவர்களால் தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூர முடியாமல் போகும் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்த தினத்தை கொண்டாடியமைக்காக நான்கு மாதங்களுக்குப் பின்னர் தான் உள்ளிட்டவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளதன் பின்னணியில் கூட தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூற விடாமல் தடுப்பதற்கான முயற்சி இருக்கலாம் எனவும் சிவாஜிலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழனப் படுகொலை வாரம் வழமைபோல் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

இதனால் அனைத்து தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் தமிழினப் படுகொலை நாளை அனுஷ்ட்டிக்க முன்வர வேண்டும் என்றும் அதன்ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு சர்வதேசத்திடம் நீதிகோர முடியும் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

1958 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட சிவாஜிலிங்கம்,பாதுகாப்பு என்பது இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வட மாகாணம் இந்தியாவிற்கு அருகில் இருப்பதால் பாகிஸ்தான் நாட்டவர்கள் உளவாளிகளாக நாட்டிற்குள் நுழைய முடியும் என தெரிவித்த சிவாஜிலிங்கம், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு மோதல் போக்கை உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

இதேவேளை நீர்கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் அகதிகளை பேருவளை போன்ற முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் குடியேற்றுவது பொருத்தமானதாக அமையும் என தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம், வட மாகாணத்தில் அவர்களை குடியேற்றுவதால் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக அது காரணமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.