முதலமைச்சர் உடல்நலக் குறைவால் திரும்பிய வரலாறு: 32 ஆண்டுகளுக்கு பின் நிதியமைச்சரிடம் தமிழக ஆட்சி

318 0

new-image_12102016_kll_cmyமுதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தமிழக ஆட்சி நிர்வாகம் 32 ஆண்டுகளுக்கு பின் நிதிஅமைச்சரிடம் சென்றுள்ளது.

1984ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்.ருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க நேரிட்டது.

அப்போது சட்டப்பேரவையும் நடந்து கொண்டிருந்ததால், ஆட்சி நிர்வாகம் குறித்து அப்போதைய நிதிஅமைச்சர் நெடுஞ்செழியன் ஆளுநரை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து நெடுஞ்செழியன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவசர மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் அமெரிக்கா செல்ல நேரிட்டதால், அவர் கவனித்த 14 இலாக்காக்களும் நெடுஞ்செழியனுக்கு ஒதுக்கப்பட்டன.

ஆட்சி நிர்வாகத்தை நெடுஞ்செழியனிடம் ஒப்படைக்குமாறு எம்.ஜி.ஆர் வாய்மொழியாக உத்தரவிட்டார் என அவரது தனிச்செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் தனித்தனியே எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய ஆளுநர் குரானா ஆட்சி நிர்வாகத்தில் மாற்று ஏற்பாட்டை செய்தார்.

எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பும் வரை ஆட்சி நிர்வாகத்தை கவனித்த நெடுஞ்செழியன், பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும் படி பரிந்துரைத்தார்.

இதன்படி நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மீண்டும் முதல்வராக பதவியேற்றதும், மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் நெடுஞ்செழியன்.

அவருக்கு பின்னர் தற்போதைய நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க உள்ளார்.

ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புகளால் ஜெயலலிதா பதவி விலக நேரிட்ட இரு முறையும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்றார்.

பின்னர் ஜெயலலிதா 2 முறை மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முதல்வர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நிதிஅமைச்சராக பொறுப்பேற்று கொண்டார் பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.