தேசியத்தலைவரின் சுவரொட்டியை ஒட்டிய பெண்ணை ஜேர்மனுக்கு நாடுகடத்தத் திட்டம்!

297 0

img_1822யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மட பேருந்துத் தரிப்பிடத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த திங்கட் கிழமை இரவு யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு எதிரிலுள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து குறித்த சுவரொட்டிகளை அகற்றியதோடு, விசாரணையை முன்னெடுத்துவந்தனர். காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமாரா மூலம் குறித்த பெண் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் பிறந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுள்ள மலர்விழி ஈஸ்வரனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் இன்று கொழும்புக்கு அழைத்து வந்து மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன்போது மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 40 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் தகவல்களைக் கேட்ட நீதவான் அருணி ஆட்டிகல, குறித்த பெண்ணை ஜேர்மனுக்கு உடனடியாக நாடு கடத்தமாறு உத்தரவிட்டுள்ளார்.