பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளியில் கசியும் என்ற சந்தேகம் காணப்படுவதாலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைப்பதில்லை என தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் தயாசிறிஜயசேகர.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சேரு பூசும் வகையில் சுமார் 640 விகாரைகளுக்கு அனுப்பபடவிருந்த கடிதங்களின் பின்னணியில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
அரச தலைவருக்கு எதிராக சேரு பூசும் வகையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது சகாக்களை பயன்படுத்தி சுமார் 640 விகாரைகளுக்கு கடிதங்களை அனுப்ப முற்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்ததாக அறிய முடிகின்றது.
உண்மையில் தனது அரசாங்கத்தின் தலைவருக்கு எதிராக இவ்வாறு மோசமான முறையில் செயற்படுகின்றமை எந்தளவு தார்மீக தன்மையுடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தவறான விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படும் இந்த கடிதங்களின் ஊடாக அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன ?
சபை முதல்வராக இருக்கும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போது வெளிநாட்டு உளவு துறையின் எச்சரிக்கை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி கிடைக்கெப்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனில் ஏன் அதனை சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்க வில்லை என்ற கேள்வி எழுகின்றது.
அதே போன்று தேசிய புலனாய்வு பிரிவு ஏன் ஜனாதிபதிக்கு அறிவிக்க வில்லை எனவும் அமைச்சர் கிரியெல்ல கேள்வி எழுப்புகின்றார்.
அரச விதிமுறைகள் தெரியாது பேசுகின்றார். இதில் உண்மை விடயம் யாதெனில் அரசாங்கத்தில் சிலர் ஜனாதிபதி மீது வீண் பழியை சுமத்துவதற்கு முற்படுவதாகவே சந்தேகம் எழுகின்றது.
நான்கு மாதங்களுக்கு முன்பதாகவே சட்ட ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தனக்கு கீழ் கொண்டு வந்தார் .
அதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் வசமே குறித்த அமைச்சு காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு அழிவை தடுக்க முயற்சிக்காது வீண் பழி சுமத்துவதில் குறியாகவே இருக்கின்றனர். போதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளினால் பாரியளவில் கைதுகள் இடம்பெற்றன. இவற்றுடன் பயங்கரவாதமும் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
உலகில் போதைப்பொருள் ஆயுதம் மற்றும் பயங்கரவாதம் என்பன் ஒன்றாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்கும் போது இலங்கையிலும் அவ்வாறானதொரு தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
ஏனெனில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ஜனாதிபதி அண்மையில் கடுமை நடவடிக்கைகளை எடுத்திருந்தார். ஆனால் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு சபைக்கு ஏன் அழைப்பதில்லை என்றவாறும் ஜனாதிபதிக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
பாதுகாப்பு சபையில் எடுக்கப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள் வெளியில் கசிந்துள்ளன.பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு அமைய பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்வதாக ஒரு தடவை பொலிஸ் மா அதிபர் தகவல் கசிய விட்டிருந்தார்.
பாதுகாப்பு சபையில் பேசப்பட்ட விடயங்கள் மறுநாள் முக்கிய ஆங்கில பத்திரிகையில் காணப்பட்டது.
எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளியில் கசிய முடியாது.
இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே அழைப்பதில்லை.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி அனைத்து பாதுகாப்பு தரப்புகளையும் தினமும் அழைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். எனவே அநாவசிய தலையீடுகளுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.


