39 நாடுகளுக்கான விசா வழங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!-அரசாங்கம்

190 0

நாட்டின் தற்போதைய பாதுகாப்புக் காரணிகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருந்த விசா வழங்கும் விசேட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான விசா வழங்கும் விசேட திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருந்தது. 

எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்புக் காரணிகளைக் கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 39 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலங்கைக்கான விசா வழங்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நாட்டின் நிலையைக் கரு;ததிற்கொண்டு அதனைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கத் தீர்மானித்திருக்கின்றோம். தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் குறித்து காணப்படும் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விசா வழங்கும் திட்டத்தினால் விசாரணைகளின் பாதிப்பு ஏற்படக்கூடாது. 

எனவே இத்தகைய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியிருக்கின்றார்.

இந்த விசா வழங்கும் திட்டம் மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் நோக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.