வதந்திகளை நம்பி பதற்றமடைய வேண்டாம் !- அரசாங்கம்

239 0

தொடர்குண்டு தாக்குதல்கள் குறித்து பொலிஸ் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல்களைத் தவிர வேறு எந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் நம்பி வீண் பதற்றமடைய வேண்டாம் என்று அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமாக கடந்த 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தொடர்குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட தாக்குதல்தாரிகள் தொடர்பில் கண்டறிவதற்கு முப்படையினருக்கு அரசாங்கத்தால் சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

அத்தோடு பொலிஸாரும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு பல சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் என்பன விஷேட அதிரடிப்படையினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அல்லது அரசாங்க தகவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்பதால் பொது மக்கள் அதனை விடுத்து வேறு எந்த போலியான தகவல்களையும் நம்பக் கூடாது.

பாதுகாப்பு பிரிவினாரால் அன்றி ஏனைய வழிகளில் வெளியிடப்படுகின்ற போலியான தகவல்களால் மக்கள் மத்தியில் வீண் பதற்றம் ஏற்படுகின்றது. அத்தோடு பாதுகாப்பு துறையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எனவே போலியான தகவல்களை நம்பி வீண பதற்றமடையத் தேவையில்லை என்று பொது மக்களுக்கு அறிவூறுத்தப்பட்டுள்ளது.