முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பும் சமூக வலைதள பக்கங்கள் முடக்க சைபர்கிரைம்

338 0

201610121149291941_cyber-crime-police-plan-to-cm-health-rumor-disable-the_secvpfமுதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்புபவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 23 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது உடல் நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அவ்வப்போது விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேவையில்லாத வதந்திகள் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல கட்சிக்கு தொடர்பில்லாத வெளி ஆட்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 30-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்புபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான சதீஷ்குமார், மதுரை பாண்டியன்நகரை சேர்ந்த ஏ/சி மெக்கானிக் மாடசாமி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்தியை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. சதீஷ்குமார் பேஸ்புக் மூலமாகவும், மாடசாமி தமிழ் எண்டர்டைன்மெண்ட் என்கிற இணையதளம் வாயிலாகவும் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக வதந்திகளை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.வதந்தி பரப்புவோருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றிய வதந்திகளை பரப்புவோர் யார்-யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

கணினிவழி குற்றங்களை கண்டுபிடிப்பதில் வல்லுனர்களாக திகழ்பவர்களின் உதவியுடன் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியுப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி வதந்தியை பரப்பும் சமூக வலைதள பக்கங்கள் எவை என்பதை கண்டுபிடித்து அந்த பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுபோன்ற வலைதள பக்கங்களின் கணக்குகளை தொடங்கி இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்வரின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்புவோரின் வலைதள பக்கங்களை முடக்கக்கோரி பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியுப் உள்ளிட்டவற்றின் தலைமை அலுவலகங்களுக்கும் சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி அவதூறு பரப்பியது தொடர்பாக 10 பேரின் வலைதள பக்கங்களை யூடியுப் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. இதனை பின்பற்றி மற்ற சமூக வலைதளங்களும், முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றிய வதந்தி பக்கங்களை முடக்க திட்டமிட்டுள்ளன.முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்புபவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் அது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவினரும் வதந்திகளை பரப்புவோர் யார்-யார்? என்பதை ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வாட்ஸ்அப் வழியாக அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.