யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய கார்!

277 0

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வாடகை கார் தரித்து நிற்கும் பகுதியில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையில் கார் ஒன்று தரித்து நின்றுள்ளது. 

அதனால் வாடகை கார் உரிமையாளர்கள் அந்த காரின் மீது சந்தேகம் கொண்டு காரின் கண்ணாடி வழியாக காரினுள் பார்த்த போது காரினுள் சில பொதிகள் காணப்பட்டன. அதனால் சந்தேகம் கொண்டோர். யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர். 

அதனை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரினை பார்வையிட்டதுடன் , அது தொடர்பில் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்தனர். 

அத்துடன் வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்தையும் தடை செய்து வாகனங்களை வேறு வீதிகளின் ஊடாக அனுப்பி வைத்தனர். அதனால் அவ்விடத்தில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. 

இந்நிலையில் குறித்த காரின் உரிமையாளர் வைத்தியசாலைக்குள் இருந்து வந்து , அது தன்னுடைய கார் என உறுதிப்படுத்தியதுடன் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது உறவினருக்கு உதவியாக வைத்தியசாலையில் காலை முதல் தங்கி நிற்பதாகவும் அதனாலையே காரினை இங்கு தரித்து விட்டு சென்றததாகவும் தெரிவித்தார். 

அதேவேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் காரினை முற்றாக சோதனையிட்டு சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் காரினுள் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைத்து சென்றனர். 

அதன் பின்னர் வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. குறித்த சம்பவத்தால் யாழ்.நகர் மத்தியில் அச்சமான சூழ் நிலை காணப்பட்ட போதிலும் , வெடி குண்டு இல்லை என்றதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள்ளனர்.