வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் – சமூக வலைதளங்களில் பாராட்டு

367 0

கேரளாவின் திரிச்சூர் மாவட்ட கலெக்டர் காவல்துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

நாளை கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அதிகாரிகளும் காவல்துறையினரும் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான அனுபமா கண்காணித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு காவலர் மட்டும் பெட்டியை இறக்குவதற்காக வாகனத்தின் அருகில் வந்து மற்றொரு காவலருக்காக காத்திருந்தார். இதை பார்த்த அனுபமா சிறிதும் யோசிக்காமல் அந்த காவலருடன் ஒரு கை பிடித்து பெட்டியை உள்ளே கொண்டு சென்றார்.

கலெக்டர் பெட்டி தூக்குவதை பார்த்ததும் மற்ற அதிகாரிகள் பதறிப்போய் உதவுவதற்காக ஓடி வந்தனர். ஆனால் அவர்களை சைகையால் வேண்டாம் என்று கூறி தானே கொண்டு செல்வதாக தடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவ தொடங்கியது.

‘இந்த இளம் அதிகாரிக்கு எங்களின் வாழ்த்துக்கள்’ என்றும் ‘இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கிறார்கள்’ என்று கூறியும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.