தமிழர்கள் மீதான யுத்தம் தொடர்கிறது – ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துரைப்பு

314 0

part-par-par2961837-1-1-0-720x480இலங்கையில் தமிழர்களின் சுய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த யுத்தம் வேறு வடிவத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம், தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழர்கள் மீதான யுத்தம் வேறு விதமாக தொடர்வதால் எல்லோரும் எதிர்ப்பார்க்கும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாமல் போகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் குறித்த விசேட அறிக்கையாளர் நேற்று, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் சிவில் அமைப்புக்ககளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கையிலேயே தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் சிறுபான்மையின மக்கள் அல்ல என்றும் அவர்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்றும் சுட்டிக்காட்டினர்.

எனவே அவர்களுக்கு அவர்களது பாரம்பரிய பூமியான வடக்கு, கிழக்கு இணைந்த சுய நிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்றும் தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.