இலங்கையின் தற்போதைய சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக காணப்படுவதாக இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதே சரியானதாகவிருக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது நிறைவடையும், ஜனாதிபதியின் அதிகாரம் எவ்வளவு தூரத்துக்கு செல்லுபடியாகும் என்பது குறித்து எதிரணியினர் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.
ஆனால், ஜனாதிபதியின் பெரும்பாலான அதிகாரம் தற்போது நாடாளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றமே உறுதிபடுத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
இந்தத் தேர்தலுக்கு யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்பது குறித்தே அனைத்துக் கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன.
மஹிந்த அணியினர், யுத்தத்தை வெற்றிக்கொண்டமை மற்றும் பௌத்த மதத்தை முன்னிலைப் படுத்தியே இந்தத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கிறது.
எனினும், இது எவ்வளவுத் தூரத்துக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிங்கள் மக்கள் 70 வீதமானோர் இந்த நாட்டில் இருந்தாலும், 5 வீதமானோர் கிறிஸ்தவர்களாகவே உள்ளார்கள். இதனால், எஞ்சியுள்ள 65 வீதமானோரில் 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே மஹிந்த தரப்பினருக்குக் கிடைக்கும்.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியிலும் யாரைக் களமிறக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது. இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர்களே முன்னிலையில் இருக்கின்றன.
எம்மைப் பொறுத்தவரை சஜித்தை வேட்பாளராக களமிறக்குவதுதான் சரியாக இருக்கும். மேலும், தற்போதைய சூழலுக்கு இணங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கே, ஜனாதிபதித் தேர்தல் சாதகமாக இருக்கும். எனவே, இந்தத் தேர்தலில் இனவாதத்துக்கு இடமிருக்காது என்றே நாம் கருதுகிறோம்” என தெரிவித்தார்.


