முற்றவெளியின் தொடர்ச்சியாகட்டும் லண்டன் எழுச்சி! – ம.செந்தமிழ்!

320 0

london_protest_tamils_004உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் லண்டன் வருகைதரும் வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கீத்றூ விமானநிலையத்தில் கொடுக்கும் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அணிதிரளும் மக்கள் திரட்சியும் முற்றவெளியின் தொடர்ச்சி என வரலாற்றில் இடம்பெறும்வகையில் பேரெழுச்சியுடன் அமைவது காலத்தின் கட்டாயமாகும்.

கொள்கைத்திடத்துடனும் இலட்சியத்திலுறுதியுடனும் மக்கள் நலனில் மாறா அக்கறையுடனும் சமரசமின்றிப் பயணிக்கும் அறம்சார்ந்த அரசியல்துணிவே தமிழர்களின் அரசியல் தலைமையாக கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களை அரியணையேற்றியுள்ளது.

வட மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்த நொடிவரை அரசியல் நெடியேதும் இல்லாதவராக இருந்த கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களால் பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டவர்களையும், தமிழ்த்தேசிய அரசியல் பின்னணி கொண்டவர்களையும், சிங்கள அரசின் ஆசீர்வாதமும் ஆதரவும் கொண்டவர்களையும் பின் தள்ளி தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்று முன்னிலைக்கு வரமுடிந்துள்ளதென்றால் அவரின் அறம்சார்ந்த அரசியல் துணிவே காரணமாகும்.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கள்ளமௌனத்தின் பின்னணியில் சம்பந்தன், சுமந்திரனின் அடிபணிவு அரசியல் மூலம் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் காலுக்கடியில் கொண்டுசேர்க்கப்படுவதை தடுக்கமுடியாது நாம் கலங்கி நின்ற வேளையில், தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வு ஒன்றே இறுதித்தீர்வாகும் என்றுரைத்து அது சார்ந்து மாறா நிலைப்பாட்டில் பயணிக்கும் தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்து ‘தமிழ் மக்கள் பேரவை’ யினை உருவாக்கியதுடன் இணைத்தலைமையேற்று வழிநடத்திவருகின்றார் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்கள்.

தமிழின விரோதிகள்-சிங்கள-பிராந்திய-அனைத்துலக அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அறம்சார்ந்த நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக சமரசமின்றி போராடிவரும் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களை அனைத்து தமிழர்களும் ஆதரிப்பது வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் செயல்பாடும் தாயகத் தமிழர்களின் மௌனமும் புலம்பெயர் தளத்தை சோர்வுநிலைக்கு இட்டுச்சென்றுகொண்டிருந்த நிலையில், சதிகளையும், எதிர்ப்புகளையும், தடைகளையும் தவிடுபொடியாக்கி யாழ்.முற்றவெளியில் ‘எழுக தமிழராக’ பேரெழுச்சி கொண்ட தாயக உறவுகள் தமது நிலைப்பாட்டினை தீர்க்கமாக பிரகடனம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் புலம்பெயர் தளம் மீளெழுச்சி கொள்வதென்பது உடனடித்தேவையாகும். அதுவும் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களின் லண்டன் வருகையின் போது வெளிப்படுத்தப்படும் எழுச்சியானது இரட்டிப்பு பலமாக அமைந்துவிடுகிறது.

குழுக்களுக்கிடையிலான நான் பெரிது.. நீ பெரிது.. என்ற தன்முனைப்பு செயற்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ நினைவெழுச்சி நிகழ்வுகள் கூறுபோடப்பட்டதன் விளைவாக தமிழீழ விடுதலையை நேசித்த புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் பங்கேற்பானது பல்லாயிரத்தில் இருந்து ஆயிரம், இரண்டாயிரமாக குறைவடைந்துள்ள நிலையில் அந்த சோர்வுநிலையகற்றி புலம்பெயர் தளத்தை மீளெழுச்சி கொள்ளவைப்பதற்கான விதையாக வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களின் வருகையை மாற்றுவோம்.

சம்பந்தன், சுமந்திரன் வரிசையில் மாவை, சிறீதரன் ஆகியோரின் புலம்பெயர் தேச வருகையின் போது நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏகபிரதிநிதித்துவம் உடைத்தெறியப்பட்டிருக்கும் புறச்சூழலில் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவானது தெளிவான செய்தியை அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துரைப்பதாக அமையும்.

எமதருமை லண்டன் வாழ் உறவுகளே!

யார் யாருக்கோ விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த நாம் எம் இனத்தின் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க ‘எழுக தமிழராய்’ அணிதிரழ்வோம் வாரீர்!

எம் மாவீரர்களின் இலட்சியக் கனவை தன் தோள்களில் சுமந்துவரும் எம் இனத்தின் முதல்வருக்கு எழுச்சிபூர்வ ஆதரவளிக்க புலிக்கொடியேந்தி வாரீர்!

வட மாகாண முதல்வர் கௌரவ நீரியரசர் விக்னேசுவரன் அவர்களின் கால்கள் பதியுமிடெங்கும் எமது கால்களும் சேர்ந்தே பதியட்டும்!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

ம.செந்தமிழ்.