பெரம்பூர் தொகுதியில் 210 பரிசு பெட்டிகள் பறிமுதல்!

37 0

பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 210 பரிசுப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பாராளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் சீதாராம் நகர் 7-வது தெருவில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் வாக்காளர்களுக்கு மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

பறக்கும்படை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக 210 பரிசுப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அ.ம.மு.க.வை சேர்ந்த மணிவண்ணன், வட்டச் செயலாளர் மாதவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.