கம்பெரலிய திட்டத்தின் மூலம் மீண்டும் ஏமாற்ற துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்-பிரபா கணேசன்

282 0

கம்பெரலிய திட்டத்தின் மூலம் வடகிழக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொண்டு தமிழர்களது வாக்குகளைப் பெற கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. 

தேர்தல் வருகின்றது என்றவுடன் மீண்டும் பதவியில் அமர்ந்து சுக போகங்களை அனுபவிக்கும் நோக்கத்துடன் விழித்துக் கொண்டு செயல்பட நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த நான்கு வருடங்களாக வடகிழக்கு தமிழ் மக்களுக்கு செய்த அபிவிருத்திகளை தேடித்தான் பார்க்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்ததாவது, மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு ரணிலையும் ஐக்கிய தேசிய கட்சியையும் காப்பாற்றுவதிலலேயே காலத்தை செலவழித்தார்கள். அத்தோடு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்து கொண்டும் தமிழ் மக்களது எந்தவொரு பிரச்சினையும் முக்கியமாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு திட்டம், காணாமல் போனவர்களின் பிரச்சினையை தீர்த்தல் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வருட தீபாவளியையும், பொங்கலையும் கடைசித் திகதியாக நிர்ணயித்தார்கள். 

முடிவில் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது தான் மிச்சம். கடந்த நான்கு வருடங்களில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் எந்தவிதமான கரிசனைகளையும் காட்டவில்லை. வடமாகாண கல்வி சம்பந்தமாக எவ்விதமான அக்கறையும் காட்டாததன் விளைவே வட மாகாணம் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவிலுள்ள மாகாணமாக மாறி உள்ளது. படித்த சமூகத்தினை கொண்டிருந்த யாழ் மாவட்ட சமூகம் கல்வியில் இன்று மாபெரும் பின்னடைவை அடைந்துள்ளது. 

வன்னி மாவட்டத்தின் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பட்டதாரிகள் பலருக்கு விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர கூட்டமைப்பினர் முன்வராததினாலேயே இன்று பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்லும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் நான்கு வருடம் கடந்த பின்னர் இப்பொழுது கம்பெரலிய திட்டத்தை காட்டி நாடகமாடுவது வேதனைக்குரிய விடயமாகும். இவர்களுக்கு வரும் தேர்தலில் வட கிழக்கு தமிழ் மக்கள் நல்லதொரு பாடத்தை புகட்டுவார்கள் என்பதே உண்மை.