தொடரும் மீறல்கள்!

431 0

சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும் சட்டங்கள் பெரிதும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில், பௌத்த சிங்களப் பேரின தீவிரவாத சிந்தனையுடையவர்களின் செல்வாக்கிற்கு சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாத அரசியல் சக்தியாக முகிழ்த்து எழுந்துள்ள பௌத்த சிங்களத் தேசிய வாதம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரையும், நீதியை நிலைநாட்டுகின்ற நீதிமன்றத்தையும் தனது கைப்பிடிக்குள் வைத்து சிப்பிலி ஆட்டுகின்ற ஆபத்தான நிலைமை ஒன்று உருவாகியிருப்பதைக் காண முடிகின்றது.

வடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவலை நகரில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவமே இந்த நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமார என்பவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளமாகிய முகநூலில் அவர் எழுதி வெளியிட்டிருந்த சிறுகதையொன்றில் பௌத்த மதத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என்ற பிரதான குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிசார் கைது செய்திருக்கின்றனர். அர்த என்ற தலைப்பில் பாகுபாடு என்ற கருத்தைக் கொண்ட அவர் எழுதியுள்ள சிறுகதையில் மத வெறுப்புணர்வைத் தூண்டியிருக்கின்றார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தை ஏற்று அதனடிப்படையில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் சக்திக்க சத்குமார மத வெறுப்புணர்வைத் தூண்டியுள்ளார் என முன்னெப்போதும் இடம்பெற்றிராத வகையில் இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அர்த என்ற அவருடைய சிறுகதையில் பௌத்த மதத் துறவியொருவர் தனது மஞ்சள் அங்கியைத் துறந்து செல்வது பற்றிய கதை பின்னப்பட்டிருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான ஐநா சாசனத்தைப் பின்பற்றி இலங்கையில் தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்தக் கதையை எழுதி வெளியிட்டுள்ள சத்குமார மீது வன்மத்துடன் பாய்ச்சப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் நிலையத்தைச் சேர்ந்த அஹுன்கல ஜினானந்த என்ற பௌத்த மத குரு, இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி சத்கமாரவை கைது செய்யுமாறு பெப்ரவரி மாதம் பொலிஸ் பிரதான அதிகாரியைத் தூண்டியிருந்ததையடுத்தே இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சிறுகதை முகந}லில் வெளியாகிய உடன் பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவொன்று அரச ஊழியராகிய சத்;குமார பணியாற்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கோரியிருந்தனர். பௌத்த மத குருக்களின் இந்தச் செயற்பாட்டினால் அழுத்தத்திற்கு உள்ளாகிய குருணாகலை மாவட்ட செயலகத்தினர் சத்குமாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றையும் நடத்தியிருந்தனர்.

இத்தகைய பின்னணியிலேயே சிங்கள மொழியிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று அரச விருது பெற்ற சத்குமார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை ஒரு நீதவான் விளக்கமறியலில் வைக்கலாமே தவிர அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க முடியார்து. அதற்கான அதிகாரம் அந்தச்சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவமானது, தென்னிலங்கையில் ஊடக சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கி ஊடகவியலாளர்களையும், பேச்சுரிமை எழுத்துரிமை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களையும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

வெளிப்படையான மத வன்முறைகள்

பேளத்த மதத்தின் உரிமைகளும், அதன் கண்ணியம் கௌரவம் என்பன போற்றப்பட வேண்டும். அத்துடன் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மாறான நிலைப்பாடும் கிடையாது. ஆனால், அந்தச் சிறுகதையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்யத்தக்க விடயங்கள் இருக்கின்றனவா, உண்மையான நிலைமை என்ன என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
இருப்பினும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளருக்கே இந்தக் கதியென்றால், தன்னிகரில்லாத நிலையில் பௌத்த மதம் கோலோச்சுகின்ற சூழலில் வேறு இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிறுகதை எழுத்தாளராகிய சத்குமார எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் முதன்மை செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவமானது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையுடன் கூடிய ஊடக சுதந்திரத்தைக் காலில் போட்டு நசித்திருப்பதாகவே ஊடக சுதந்திரச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றார்கள்.

பன்முகப்படுத்தப்பட்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனம் உருவாக்கப்பட்டது என்று அந்த சாசனம் பற்றிய ஐநா அறிக்கை கூறுகின்றது. உண்மையிலேயே ஒரு மதத்தை நிந்தனை செய்பவரையும் நிந்தனை செய்த எழுதுபவரையும் படைப்பிலக்கியம் படைப்பவரையும் அனுமதிக்க முடியாது.

பௌத்த மதமே இன்று அரசிலயமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கின்றது. எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும்கூட சிறப்பான உரிமைகளையே அந்த மதமும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் குறிப்பாக பௌத்த மதத்துறவிகளும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய இந்தச் சிறப்புரிமையானது, ஏனைய மதத்தவர்களின் செயற்பாடுகளையும், பௌத்த மதம் பெரும்பான்மையாக அனுட்டிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இருப்பையும்கூட கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

பன்மைத் தன்மை கொண்ட மத உரிமை நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் சீரழிக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து பௌத்த மேலாதிக்க சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மத ரீதியான வன்முறைச் சம்பவங்களையும் இலங்கையர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாது.

இஸ்லாமிய மதத் தலங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ச்சியாக அவ்வப்போது பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், அந்த மதத்தைச் சார்ந்த மக்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள், இருப்பிடங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் பட்டப்பகலில் மோசமான முறையில் இடம்பெற்றிருந்தன.

இந்தச் சம்பவங்களில் வெளிப்படையாகவே பௌத்த மதத்துறவிகள் ஈடுபட்டிருந்தை அந்த்ச சம்பவங்கள் பற்றிய காணொளிகளும் அவர்களின் நேர்காணல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியிருந்தன. அதேபோன்று சிலாபம் பகுதியில் உள்ள இந்தக்களின் முக்கியத்துவம் மிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தினுள்ளே பௌத்த மதத் துறவிகளும் பௌத்த மத முக்கியஸ்தர்களான அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர்களும் அத்துமீறிப் பிரவேசித்து, அந்த ஆலயத்தின் பாரம்பரிய செயற்பாடாகிய மிருகபலி வழிபாட்டு முறையைத் தடுத்து நிறுத்தவதற்கு முற்பட்டிருந்தனர்;. இந்தச் சம்பவங்களின்போது ஆலய அறங்காவலர்களும் ஆலய குருக்களும் உயிரச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

இந்தச் சம்பவங்கள் அனைத்துமே பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலை என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் எதேச்சதிகாரப் போக்கில் அந்த மதத்தைச் சார்ந்த துறவிகளும் மதத் தலைவர்களும் அத்துமீறிச் செயற்படுகின்ற தன்மையைப் புலப்படுத்தியிருக்கின்றன.

சட்டத்திலும் பாகுபாடு

அதேநேரம் முதன்மை நிலையில் தேசிய மதமாக அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களை அடக்கி ஒடுக்குவதுடன், அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து, பௌத்த மதத்தைப் பலாத்காரமாக பரப்புகின்ற செயற்பாடுகளும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

இஸ்லாமிய மதத்தின் மீது மட்டுமல்லாமல், கிறஸ்தவ மதத்தின் மீதும் இந்த அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அத்துடன் இந்து சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் இந்து ஆலயங்கள் அமைந்தள்ள வளாகங்களில் பலவந்தமாக புத்தர் சிலைகளை நிர்மாணித்து. அதற்கருகில் பௌத்த துறவி ஒருவர் நிலைகொண்டிருப்பதும் சாதாரண நிகழ்வாக இடம்பெற்றிருக்கின்றன.

வடமாகாணத்தில் மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்ற மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு பௌத்த மத ஆக்கிரமிப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருக்கின்றன. நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்கின்ற எவரும் இந்தக் காட்சிகளை சாதாரணமாகக் காண முடியும்

இந்து வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள முக்கியமான இடங்களில் அதற்கு அண்மையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வழ்பாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேநேரம் அந்த இடங்களில் வசதியைப் பொறுத்து பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்புகின்ற போர்வையில் பௌத்த மதத்தையும் அந்த மதத்திற்குரிய சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் வலிந்து திணிக்கின்ற ஓர் அடாவடித்தனச் செயற்பாடுகளை அரசாங்கம் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான பௌத்த மதத்திணிப்பை மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி தமது வாடிக்கையான செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றன. இது சிறுபான்மை இன மக்களை பேரின மதவாத ஆக்கிரமிப்பின் மூலம் அடக்கி ஒடுக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எதிரானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில், ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தைப் பின்பற்றி பன்முகத் தன்மை கொண்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

எவரேனும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் மீது மதவெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாலும், அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய மத உரிமையை மறுத்தும், மீறியும் செயற்பட்டாலும் அல்லது அவர்கள் மீத மத ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளின் மூலம் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் நியாயமும் நீதியும் வழங்க வேண்டியதும் இந்தச் சட்டத்திழன் பொறுப்பாகும்.

ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் உயிரச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் உடைமைகள் அழிப்பு, அத்துடன் உயிரிழப்புக்கள் என்பவற்றுக்கு எதிராக இந்தச்சட்டம் பாயவே இல்லை. இந்தச் சட்டம் மட்டுமல்ல. சாதாரண குற்றவியல் சட்டங்களும் கூட இந்தச் சம்பவங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சாதாரண சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவதற்கு சாதாரண சட்டங்களின் கீழ் வழிசெய்யப்பட்டிருக்கின்றன.

மத ரீதியான வன்முறைகளின் மூலம் பொது அமைதி பாதிக்கப்பட்டு, உயிராபத்து மிக்க பதட்டடமான சூழல் பல தினங்கள் தொடர்ந்த நிலையிலும்கூட சாதாரண சட்டங்களோ அல்லது ஐநா சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட மத அடக்குமுறைக்கு எதிரான சட்டமோ, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரிகளினால் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அச்சமான ஒரு சூழலிலேயே சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பௌத்த மதத்தின் கௌரவத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் சத்குமாரவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஆபத்தான ஒரு போக்காக மேலெழுந்து நிற்கின்றது. அத்துடன் மத உரிமை என்பது பௌத்த மதத்திற்கு மட்டுமே தனித்து சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது.

பேரினவாதிகளும் பேரின மதவாதிகளும் பௌத்த தேசிய தீவிரவாதிகளும் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்து நெளித்து பயன்படுத்துகின்ற ஒரு போக்கு இந்த நாட்டில் இன்று நேற்றல்ல நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற சில வருடங்களில் இருந்தே இடம்பெற்று வருகின்றது.

தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஸ்ரீ என்ற எழுத்தை முதன்மைப்படுத்தி கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1958 ஆம் ஆண்டு வன்முறைகள் தொடக்கம் இன்று வரையிலும் இந்தப் போக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு சம்பவங்களில், பல்வேறு விடயங்களில் எந்தவிதமான அச்சமுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது. சுhதாரண சட்டங்களின் கீழ் மட்டுமல்லாமல் யுத்த மோதல்களின் போது அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு யுத்தம் முடிவடைந்த பி;ன்னரும் இன்னும் நீடித்தள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும் இன ஒடுக்குமுறையையும், மத ஒடுக்குமுறையையும் அதன் அடிப்படையிலான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளும் முன்னெடு;ககப்படுவது தொடர்கின்றன.

இறுதி யுத்தத்தின்போது மட்டும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சர்வதேச சட்டங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படுகின்றன என்பதையே சிறுகதை எழுத்தாளராகிய சக்திக்க சத்குமாரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை புலப்படுத்தியிருக்கின்றது.

பி.மாணிக்கவாசகம்