வயநாட்டில் ராகுல் போட்டி எதிரொலி – கேரளாவில் மோடி அதிரடி பிரசாரம்

361 0

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், கேரளாவில் மீண்டும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். 

கேரளாவில் வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

இம்முறை கேரளாவில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. 

இதற்காக நடிகர் சுரேஷ்கோபி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மத்திய மந்திரியுமான அல்போன்ஸ் கன்னம்தானம், பி.ஜே.டி.எஸ். கட்சி தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. 

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வெற்றி பெற பாரதிய ஜனதா வியூகம் வகுத்து பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்காக சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. 

இந்த நிலையில் கேரள தேர்தல் களத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியானதும், காங்கிரசை எதிர்க்கும், கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. 

வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பி.ஜே.டி.எஸ். கட்சி தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

நேற்று ராகுல் காந்தி வயநாட்டிற்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அவருடன் சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தார். 

ராகுல்காந்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கல்பேட்டாவில் காங்கிரஸ் நடத்திய ரோடு ஷோ கேரள அரசியல் கட்சிகளை வியப்பில் ஆழ்த்தியது. 

காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும், ராகுல் வருகையால் திசை மாறும் ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்பவும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டு கட்சி, அவர்களின் தேசிய தலைவர்களை வயநாட்டிற்கு அழைத்துவந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மோடியை மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு அழைத்து உள்ளது. அவருடன் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வந்து பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்த முடிவு செய்துள்ளது. 

திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக கும்மனம் ராஜ சேகர் போட்டியிடுகிறார். இவர், மிசோரம் கவர்னராக இருந்தவர். தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

இதற்காக பிரதமர் மோடியை மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு அழைத்து வர பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். 

கேரளாவில் ராகுல் போட்டியிடுவதால் ஏற்பட்ட நெருக்கடியை பிரதமர் மோடியின் பிரசாரத்தால் மட்டுமே சரிக்கட்ட முடியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் நம்புகிறார்கள். 

கேரள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே பிரதமர் மோடி கேரளாவில் மீண்டும் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிகிறது. 

கேரளாவிற்கு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி வரலாம் என்று தெரிகிறது. அன்று திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என தெரிகிறது. 

கேரளாவில் 21-ந்தேதி வரை பிரசாரம் செய்யலாம் என்பதால் அதற்குள் மேலும் ஒருமுறை பிரதமர் மோடி கேரளாவில் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.