8 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் கரன்னாகொட

354 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் நான்காவது தடவையாகவும் இன்று 8 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது. 

இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விசாரணைகள் நீடித்தன. ஏற்கனவே  இடம்பெற்ற விசாரணைகளில் வெளிப்டுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் இன்று இடம்பெற்றதாக சி.ஐ.டி.  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக  சி.ஐ.டி. இறுதியாக கடந்த மார்ச் 19 ஆம் திகதி  3 ஆவது தடவையாக கரன்னகொடவை விசாரித்திருந்தது.  இதன்போது அவரிடம்  4 மணி நேரம் தீவிர விசாரணை இடம்பெற்றிருந்தது.  அதற்கு முன்னர்  கடந்த 11 ஆம் திகதி திங்களன்று 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. கடந்த 13 ஆம் திகதி  மீளவும் அவரை ஆறு மணிநேரம் விசாரித்து வாக்கு மூலம் பெற்றிருந்தது.  

இந் நிலையிலேயே  மீண்டும்  அவரிடம் இன்று விசாரணை செய்யப்பட்டது. அதன்படி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் 11 பேர் கடத்தி காணாமல் அககப்பட்டமை  தொடர்பில் இதுவரை 26 மணி நேரம் வரை விசாரணைகள்  நடத்தப்பட்டுள்ளது.