தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன- வைகோ

309 0

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்கு உறுதிகளை மோடி நிறை வேற்றவில்லை.

ஜிஎஸ்டியால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம். பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக மாறி விடும்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.