ஐ.நா தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என நான் நம்பவில்லை!-சாள்ஸ்

200 0

ஐ.நா தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என நான நம்பவில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் சர்வதேச நீதிபதிகள் அடங்கலாக இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றத்தை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. 2017 ஆம் ஆண்டு அதே தீர்மானம் 34/1 தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமென்று இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. ஆனால், இலங்கை  அரசாங்கத்தால் முன்னேற்றங்கள் எடுக்கப்படவில்லை. 

அதேபோன்று, 2019ம் ஆண்டு 40/1 தீர்மானம் அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தையும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துமென்று நான் நம்பவில்லை. 

இந்த 40/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனில், சகல தமிழ் கட்சிகளும், சகல புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து 24 நாடுகளுடைய ஆதரவை பெற்று இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்களை சர்வதேசத்தால் நடைமுறைப்படுத்துகின்ற தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.