இலங்கைக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ள நகர அபிவிருத்தி திட்டம்

262 0

champika_ranawaka_10இலங்கைக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ள நகர அபிவிருத்தி திட்டமொன்று அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியின் போது இந்த தகவலை வெளியிட்டார். பிரதான நகரங்களை மூலோபாய அபிவிருத்தி நகரமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

74 சிறிய நகரங்கள் சிறப்பான நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டையில் விசேட பொருளாதார வலயம் அமைக்கப்படும். மன்னார் மற்றும் கற்பிட்டியை எரிசக்தி கேந்திர அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேல் மாகாணத்தை கேந்திரமாக கொண்டு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வறுமையை ஒழித்தல், வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், கழிவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து துறையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ஹொரண மற்றும் மீரிகம ஆகியனவற்றை கைத்தொழில் நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக மேல் மாகாணத்தை பொது போக்குவரத்து கேந்திர நிலையமாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

ரயில் பாதை கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது. அளுத்கம – பொல்கவெலவுக்கும் இடையில் மின்சார ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படும். களனிவெளி ரயில் பாதை இருவழி ரயில்பாதையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கவுள்ளது.

முக்கிய ஏழு நகரங்களை தொடர்புபடுத்தி ரயில் போக்குவரத்து சேவை கட்டமைப்பு அமைக்கப்படும். இதில் இரண்டுக்கு ஜெய்க்கா நிறுவனம் உதவி வழங்குகிறது. 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன.

புதிய வீதி கட்டமைப்பு ஒன்றும் ஐந்து போக்குவரத்து மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. அடுத்த வருடத்தில் புதிதாக ஆயிரம் பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் மூலம் பயணிப்போரை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

கொழும்பிலுள்ள குடிசைவாழ் மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் 20 ஆயிரம் வீடுகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.