சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்

257 0

இலங்கையில் உள்ள சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் கொத்மலை எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்து வருகின்றது. இந்த உதவிகளில் அநேகமானவை மீள செலுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை.

இது எமது பொருளாதாரத்திற்கு பாரிய ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது. ஆனால் ஏனைய நாடுகளின் உதவிகள் வட்டியுடன் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே இந்தியாவின் உதவிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றது.

நியூசிலாந்து நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் துக்ககரமான சம்பவம் தொடர்பாக அந்த நாட்டினுடைய ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டன. அதனை நமது நாட்டு ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என நான் கருதுகின்றேன்.

இலங்கையில் இருக்கின்ற ஒரு சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கின்றது. இதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.