25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ!

291 0

சீனாவில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ 25 நாட்கள் வரை அங்கே தங்கியிருக்கக்கூடும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்புக் கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி தொடங்கி, 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கிற்கு இராணுவ விஞ்ஞானத்துக்கான சீன சங்கம் மற்றும் அனைத்துலக மூலோபாய கற்கைகளுக்கான சீன நிறுவகம் ஆகியன இணை அனுசரணை வழங்கியுள்ளன.

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், கல்வியியலாளர்கள், அனைத்துலக அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் அரச அதிகாரிகள், புலமையாளர்களுக்கும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதில் 60இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சீனா செல்வதற்கு கோத்தாபய ராஜஸபக்சவுக்கு கொழும்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து அவர் கடந்த 5ஆம் திகதி சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். வரும் 12ஆம் நாள் இந்தக் கருத்தரங்கு முடிந்த பின்னரும் அவர் சீனாவில் தொடர்ந்து தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வரும் 30ஆம் திகதிக்குள் அவர் கொழும்பு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 25 நாட்கள் வரை அவர் சீனாவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.