போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய 22 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது !

236 0

இன்று 107.22 கிரோகிராம் ஹெரோய்னை மீன்பிடி படகில் கடத்தி வந்த நிலையில் காலி கடற்பரப்பில்  கைதுசெய்யப்பட்ட 9 ஈரானியர்களைத் தவிர்த்து இந்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 22  வெளிநாட்டவர்கள் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்களுள் 1 ஈரானியப் பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் ஜனவரி மாதம் 31ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, 400 ​கிராம் குஷ் விஷப் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டார்.

இன்று ​இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு 41 வெளிநாட்டவர்கள் போதைப் பொருட்களுடன் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், இதில் ஈரானியர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும், 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட  83 வெ ளிநாட்டவர்களுள் 10 ஈரானியர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு இலங்கை கடற்படையினரால் 2608 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதெனத் தெரிவித்த கடற்படையின் ஊடக இணைப்பாளர் இசுரு சூரியப்பண்டார, இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 970 கிலோகிராம் ​கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.