ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு !

239 0

அண்மையில் காலமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு 24.03.2019 ஞாயிறு காலை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையைத் தொடக்கி வைத்தார்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவத்தமிழ் வித்தகம் என்ற நினைவு நூலை வெளியிட்டு வைத்ததோடு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் சார்பாக அமரர் சிவ. மகாலிங்கத்திற்கு தேகாந்த நிலையில் திருமந்திரக் கலாநிதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். ஆதீன முதல்வருடன் வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, ஓய்வு பெற்ற பேராசிரியர் ம.வேதநாதன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர், சின்மயா மிஷன் சிதாகாசானந்த சுவாமிகள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், தமிழருவி த.சிவகுமாரன், அமரரின் சகோதரர் சிவ. பஞ்சலிங்கம், தமிழக எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி ஆகியோர் பிரார்த்தனை உரைகளை ஆற்றினர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன் நூலின் வெளியீட்டுரையையும் அமரரின் புதல்வரும் இந்தியன் எக்ஸ்பிறஸ் ஊடகவியலாளருமாகிய ம.அருளினியன் நிறைவுரையையும் அமரரின் புதல்வர் வைத்திய நிபுணர் ம.அரவிந்தன் நன்றியுரையையும் ஆற்றினர்.

நிகழ்வின் தொடக்கத்தில் அமரரின் பாரியார் சாந்தா சிவ.மகாலிங்கம் நினைவுச் சுடர் ஏற்றினார். யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் தாட்சாயணி கணேசநாதனின் இசைக் கச்சேரியும் விதுஷா கோபிகிருஷ்ணாவின் வீணைக் கச்சேரியும் இடம்பெற்றன. அணிசேர் கலைஞர்களாக மிருதங்கம் – க. நந்தகுமார், ஓகன் – ம.மனுசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

வைத்திய நிபுணர் ம.அரவிந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளை – திருமந்திரக் கற்கை ஊக்குவிப்பு, ஆன்மீக இளம் சொற்பொழிவாளர் ஊக்குவிப்பு, பின்தங்கிய பிரதேசங்களுக்கான மருத்துவ முகாம் நடத்துதல், குப்பிளான் கிராம கல்வி வளர்ச்சிக்குப் பங்களித்தல் முதலிய செயற்பாடுகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.