வடக்கு மக்களுக்கு செய்தது என்ன கூறமுடியுமா ?- தினேஷ்

207 0

வடக்கு மக்களுக்கு செய்தது என்னவென கூறமுடியுமா என  பிரதான எதிர்க்கட்சி எம்.பி.யான தினேஷ் குணவர்தன  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

வடக்கில் கைத்தொழில் துறையும் கூட்டுறவுத்துறையும் பலம்பெற்றிருந்தது .அங்கு கண்ணாடித் தொழிற்சாலைகூட இயங்கியது. ஏனைய தொழிற்சாலைகள் இயங்கின. ஆனால் நல்லாட்சியின் கடந்த  நான்கு ஆண்டுகளில்  வடக்கில் ஒரு கைத்தொழில்  பேட்டையாவது உருவாக்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களுக்காக இந்த அரசாங்கம் ஏதேனும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதா?  அரசாங்கம் என்ற வகையில் அங்கு நீங்கள் செய்தது என்ன என்பதனைக்கூற முடியுமா? இன்று வீடு வீடாகச் சென்று கடன் கொடுக்கின்றனர்.

இதில் மத்திய வங்கி தலையிட்டுள்ளதா?  வெறுமனே மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றது. இவை குறித்து அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்க்கின்றது என தினேஷ் குணவர்தன  சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

இலங்கையில் பலமாக செயற்பட்ட  கூட்டுறவுத்துறை இன்று பலவீனமடிந்து  இன்று  பல்வேறு ஊழல்,மோசடிகளால் நிறைந்துபோயுள்ளது. இவை குறித்து  எந்தவொரு  நடவடிக்கைகளும் எடுக்காத ஆணையாளர்களே உள்ளனர்.

கூட்டுறவுத்துறையின் சொத்துக்கள் விற்கப்படுகின்றன. சகல கிராமங்களிலும் கூட்டுறவுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. கூட்டுறவுத்துறையில் திருடுவதற்கு இடமளித்துவிட்டு உயரதிகாரிகள் தூங்குகின்றனர். 

எனவே  கூட்டுறவுத்துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.  அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் கைத்தொழில் , வாணிப அலுவல்கள் ,  கூட்டுறவு அமைச்சுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை. இந்நிலையில் எப்படி கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க முடியும்? கைத்தொழில், வாணிப அமைச்சின் கீழுள்ள காரியம் சுரங்கக் கைத்தொழிலை உடனடியாக ஜனாதிபதி வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இச்சுரங்க கைத்தொழில் நாசமாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.