அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் கோப் குழுவில் பிளவு

328 0

thumb_large_arjunஇலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக கோப் குழு நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கணக்காய்வாளர் கோப் குழுவிற்கு வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது.

திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோப் குழு பிளவுபட்ட அறிக்கையையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என அந்த குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலில் நடந்ததாக கூறப்படும் ஊழலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் அர்ஜூன் மகேந்திரன் பொறுப்பாளி அல்ல என பரிந்துரைத்துள்ளனர்.

திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயத்தில் கோப் குழுவின் உறுப்பினர்கள் இரண்டாக பிளவுபட்டிருந்தாலும் அது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கு பதிலாக ஒரு அறிக்கையில் இரண்டு பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போதைய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட மத்திய வங்கியின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.