கோட்டாவை ஜனாதிபதியாக்க மக்கள் முட்டாள்கள் அல்லர் – விக்ரமபாகு கருணாரட்ன

195 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என்று இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யுத்தக் காலத்தின்போதும் கோட்டாபய ராஜபக்ஷ பயனற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். நாட்டில் பல கொலைகளை செய்தார்.இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவ்வாறான கொலைக் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று நான் நம்பவில்லை.

இதுபோன்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்களும் முட்டாள்கள் இல்லை. மக்கள் அறிவாளிகள். கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கினால், அந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும்.

ஒருவகையில், இவ்வாறான ஒருவர் வேட்பாளராக களமிறங்குவது நன்மையே என்றும் தெரிவித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இவரை எதிர்த்து போட்டியிடும் தலைவர் ஒருவரால் இலகுவாக வெற்றி பெறமுடியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதனால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தக் கூட்டணி தொடர்பாக ஒரு முடிவுக்கு வர இதுவரையில் முடியாமல் இருக்கிறது.

அதையும் மீறி ராஜபக்ஷக்களின் ஒருவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பாரிய பின்னடைவாகவும் ஏமாற்றமாகவுமே அமையும்.

இதனால், மைத்திரி அணியினருக்கு பொதுஜன பெரமுனக் கூட்டணியிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமைக்கூட ஏற்படலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.