ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி!

245 0

ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

புரந்தரேஸ்வரியின் கணவரும், முன்னாள் மந்திரியுமான தக்குபாடி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த 2004–ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய இவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான புரந்தரேஸ்வரி, மாநில பிரிவினை காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.

அரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர்.