தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே!

318 0

தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே  தங்கியுள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை 
“இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஓரணியில் செயல்படுவது தொடர்பில் ஆராய்வு”என்ற தலைப்பில் இன்றைய தினம் 20/03/2019 வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதனை இவ் அறிக்கை மூலம் “அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை”யானது தெளிவுபடுத்துகின்றது.
21ஆம் நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலையை செய்த  சிங்கள பௌத்த பேரினவாத அரசு, தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர் மீது மேற்கொண்டுவரும் கட்டமைப்புசார் இனவழிப்பிற்கு ஆதரவாக செயற்படும் சில புலம்பெயர் அமைப்புகளும் ,தாயக மக்களின் அரசியல் அபிலாசைக்கு மாறாக  செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்,  நல்லாட்சி என்ற பெயர் வடிவில் ஈழத்தமிழர் மீது மேற்கொண்டுவரும் இனவழிப்பை மூடிமறைத்து அதன் மூலம் சர்வதேசத்திற்கு முன் உண்மையை வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கைகளுக்கு துணைபோகின்ற நிலையில்,   இவ் அமைப்புகளோடும் இக்கட்சியோடும் தமிழ் தேசியத்தின்பால் விடுதலைக்கொள்கையுடன் உறுதியோடு நின்று செயற்படும் நாம் ஒருபோதும் சேர்ந்து பயணிக்க மாட்டோம் என்பதை தெரிவிக்கின்றோம். 

 சிறீலங்கா பௌத்த  அரசுக்கும், தமிழின அழிப்பிற்கு   உடந்தையாகவிருக்கும் தமிழ்த்  தேசிய  கூட்டமைப்பிற்கும்  மற்றும்  சர்வதேசத்திற்கும் கேட்குமுகமாக கடந்த  16/03/2019 அன்றும் மற்றும் நேற்றைய தினமும் (19/03/2019) ஈழத்தமிழர்களின்  தாயகமான வடக்குகிழக்கில் எமது  மக்கள் கொண்ட எழுச்சி மூலம் மீண்டும் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும்  தமது அரசியல் வேணவாவை எடுத்துரைத்துள்ளனர்.இந் நிலையில் தாயக  மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிய அரசியல் பயணத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையானது என்றும் தயார் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
   விடுதலையை நோக்கிய செயற்பாடுகளில் தமிழ் அமைப்புகளின் அல்லது கட்சிகளின்  அணுகுமுறைகள் பல்வேறு வடிவங்களாக திகழ்ந்தாலும்  தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே  தங்கியுள்ளது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”  

 அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை