300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகம் பொதுச்சந்தை

350 0

வலிதெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுச் சந்தையினை அதி நவீன வசதிகள் கொண்ட சந்தைத் தொகுதியாக மாற்றுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் முயற்சியின் மூலம் பெருநகர அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த ஆண்டு  200 மில்லியன் ரூபாவும் அடுத்த ஆண்டுக்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதற்கான ஆரம்ப பணிகள் மற்றும் குறித்த திட்டத்தினை விரைவுபடுத்துவதற்காக பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் அழைப்பின் பேரில் அமைச்சர் மனோகணேசன் இன்று காலை சுன்னாகம் சந்தைக்கு விஜயம் செய்து சந்தையின் கட்டமைப்பு தொடர்பாக வியாபாரிகள் மற்றும் பொது மக்களோடு கலந்துரையாடினார். 

இதன்போது சுன்னாகம் சந்தையினுடைய பெருமையினை வெளிப்படுத்துகின்ற பாரம்பரிய கட்டிடத்தில் மாற்றம் ஏற்படாத வகையில் நவீன சந்தைத் தொகுதி அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இவற்றை கவனத்தில் எடுத்த அமைச்சர் பெருநகர அபிவிருத்தி அமைச்சருக்கு குறித்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டு இலங்கையின் சிறந்த சந்தைத் தொகுதியாக சுன்னாகம் சந்தையினை மாற்றுகின்ற பணி விரைவு படுத்தப்படும் என தெரிவித்தார். 
இவ் விஜயத்தின் போது வலிதெற்கு பிரதேச சபையின் மற்றைய சந்தையான மருதனார்மடம் சந்தைக்கும் சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு மருதனார்மட மரக்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முகுந்தன் உட்பட்ட வியாபாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.