சமஷ்டிக்கான பலத்துக்கு இடமளிக்கப் போவதில்லை – சஜித்

415 0

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி என்ற பயணத்தை ஆரம்பிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தாம் அடிபணிந்த  சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில்  அதிகாரங்களை அவர்களுக்கும் வழங்கி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஐக்கிய இலங்கை என்பதே  மஹிந்த -ரணில் இருவரதும் நோக்கமாகும்.  ஆனாலும்  அதனை அடைய முயற்சிக்கும் வழிமுறை வேறு எனவும் அவர் குறிப்பிட்டார். 

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்த நாட்டில் வீட்டுப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண  5.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு  1இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த  2015 தொடக்கம்  2019 ஆம் ஆண்டுவரையில் எமது ஆட்சியில் 3 இலட்சத்து, 56 ஆயிரத்து 540 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். இதற்காக மொத்தமாக 29 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே எமது அரசாங்கம் இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றே கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.