கட்டணம் செலுத்தாமல் பயணித்த சந்திரிக்கா!

291 0

chandrika-kumaratunga-400-seithyமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்க உட்பட மேலும் 9 அமைச்சர்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கடமை பயணங்களுக்காக விமான படையின் ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கான பணம் இதுவரையிலும் செலுத்தவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில வாய்வழி பதில் எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா, காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஹெலிகொப்ட்டர் பயணங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக அவரது பதிலில் தெரியவந்துள்ளது.

அமைச்சர்களுக்கு மேலதிகமாக வட மத்திய மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு ஹெலிகொப்டர் மற்றும் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு விமான பயண வசதிகள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.