சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது

288 0

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட எட்டு சாரதிகள் கைது செய்யப்பட்டதோடு, மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வழிகாட்டலின் கீழ் பல்லின குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சாரதிகளைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களான சாகாம், கண்ணகிபுரம், ஒலுவில் ஆகிய பகுதிகளில் ஆற்று மண் மற்றும் கடல் மண் அகழ்வில் ஈடுபட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களில் சிலர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், டிப்பர் வாகனம் ஒன்றும், சிறய ரக கென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றியமை மற்றும் நிபந்தனைகளை மீறிய வகையில் மணலை ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றங்களின் அடிப்படையிலேயே சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.