வெளிநாட்டு நலன்சார் வரவு செலவு திட்டத்தையே ஐ. தே.க. முன்வைத்துள்ளது ; அதுரலியே

188 0

ஐக்கிய தேசிய கட்சியின் இந்த வரவு செலவு திட்டம்  தேசிய உற்பத்தியை உருவாகி நாட்டினை பலப்படுத்தும் வரவு செலவுத்திட்டம் அல்ல. மாறாக ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தும் சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தவுமே முன்வைக்கப்பட்டுள்ளது. என எதிர்க்கட்சி தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். 

2020ஆம் ஆண்டுடன் இந்த ஆட்சியையும் விரட்டியடித்து மாற்றுப்பயணம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

எமது நாட்டினை நாமே உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தும் அதனை  கருத்தில் கொள்ளாது வெளிநாட்டு நலன்சார் வரவு செலவு திட்டத்தையே ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ளது.

 இத்தனை காலமாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை நாம் விமர்சித்தோம், ஆனால் இந்த அரசாங்கமும் அதே பாதையில் தான் பயணித்தி நாட்டினை நாசமாக்கிவிட்டது. எம்மால் மீள செலுத்த முடியாத அளவிற்கு  கடன் பெறப்பட்டு விட்டது. கடன் சுமை 84 வீதமாக அதிகரித்துள்ளது. 

தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை எடுத்துப்பார்த்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. அவர்களின் லயன் வீடுகளை நீக்கிவிட்டு பாதுகாப்பான  வீடுகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். 

150 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட தேயிலை செடிகள் தான் இன்றும் உள்ளது. அதனை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. இந்த அரசாங்கம் மிகவும் மோசமானது, 

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமே இப்பொது முன்வைக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆட்சியில் அனைத்துமே தனியார் மயப்படுத்தப்பட்டு விட்டது. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து விட்டனர். தனியார் மயப்படுத்தல் என்பது ஐக்கிய தேசிய கட்சி மட்டும் அல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காலத்திலும் இடம்பெற்றது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் தான் தொழிற்சாலைகள் பல தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் எவருடனும் நாட்டினை முன்னெடுத்து கொண்டுசெல்ல முடியாது. சிங்கபூர் தாய்லாந்து உடன்படிக்கை மூலமாக நாட்டினை விற்றுவிட்டனர். ஆகவே  இந்த ஆட்சியையும் நிராகரித்து  மாற்றி பயணம் ஒன்றினை நாம் உருவாக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.