எதிர்பார்ப்புகளுடன் இருந்த தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது – டிலான்

216 0

இந்த ஆட்சியார்களை நம்பி வாக்களித்த தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுப்பனவும் இல்லாத, நாட்டு மக்களுக்கு அபிவிருத்தியும் இல்லாத ஆட்சியே  இந்த நான்கு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வரவு செலவு திட்டம் வெறுமனே தேர்தலை இலக்குவைத்த ஒன்றென எதிர்க்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

வரவு செலவு திட்டத்தில் வரவு இல்லை வெறுமனே கடன் மட்டுமே உள்ளது. ஆகவே வரவு இல்லாத கடன் செலவு திட்டமே இதுவாகும். 52 நாட்களில் நாங்கள் கொடுத்த சலுகைகூட இந்த வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை. குறுகிய காலத்தில் நாங்கள் கொடுத்த சலுகைகள் கொண்டே இன்றுவரை விவசாயிகள் செயற்பட்டு வருகின்றனர். 

அதேபோல்  தோட்டத்தொழிலாளர் சம்பள பிரச்சினையில் அவர்களுக்கு 900 ரூபாவை கொடுக்கும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கான வாய்ப்புகள் இருந்தது, நாம் அதற்கான நடவடிக்கைகளை  எடுத்தோம். எனினும் நல்லாட்சியில் தலைவர்கள் 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கூறி ரணில் விக்கிரமசிங்கவை  ஆதரிக்க கூறினார்கள்.

 ஆனால்  இன்று தோட்டத்தொழிலாளருக்கு சம்பள கொடுப்பனவுகளும் இல்லை அபிவிருத்தியும் இல்லை. இறுதியாக வரவு செலவு திட்டத்தில் மக்களை ஏமாற்றக்கூட  அவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவோம் என கூறவில்லை. எதிர்பார்ப்புகளுடன் இருந்த தோட்டத்தொழிலாளர்களை  அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. எனத் தெரிவித்தார்.