இலங்கை மீது கடுமையான நடவடிக்கை தேவை – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

216 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளில் சிலவற்றை நிறைவேற்றத் தவறியமைக்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க தனது அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று யோசனை முன்வைத்திருக்கிறார்.

இலங்கை தொடர்பான அறிக்கை இன்று ஜெனீவாவில் பகிரங்கப்படுத்தபப்பட்டது. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 20 ஆம் திகதி முறைப்படியாக அந்த அறிக்கையை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்செலெற் சமர்ப்பித்த பிறகு உறுப்பு நாடுகள் அதை விவாதிக்கும்.

2015 அக்டோபர் தீர்மானத்துக்கு  (30/1)  இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக   சட்டத்தின் ஆட்சியையும் மனித உரிமைகளையும் மதித்து, பொறுப்புக்கூறும் கடப்பாட்டின் அடிப்படையில் பிரகாசமான எதிர்காலம் ஒன்றைக் கட்டியெழுப்புமுகமாக கடந்த காலம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்திருந்தது என்பதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் உயர்ஸ்தானிகர்  அந்த இலக்கை நோக்கி தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை தவறியதனாலும் உகந்த முறையில் தொடர்பாடல்களைச் செய்யாததாலும் பரந்தளவில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.