இன்னும் சில மாதங்களில் அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிப்பார்கள்-ரணில்

296 0

இன்னும் சில மாதங்களில் அபிவிருத்தியின் பலன்கள் பலவற்றை பொதுமக்கள் அனுபவிப்பார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரியவில் நேற்றைய தினம் நாட்டில் பாரிய அளவிலான ஏற்றுமதி பொருட்கள் தயாரிப்பு வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், பிங்கிரிய வர்த்தக வலயத்தின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக வலயங்களை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி வீட்டிற்குச் சென்றிருந்தால் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திருக்காது. தொழிற்சாலைகளை அமைப்பதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற கொள்கையின்படி தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. உலகத்துடன் போட்டியிடும் சவாலுக்கு சிறப்பாக முகம்கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

நாட்டையும் மக்களையும் வளப்படுத்துவதே தமது நோக்கம். மக்களின் போலி தேசப்பற்றைக் காண்பித்து மக்களிடம் ஏமாற்றும் தேவை தமக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், 6 ஆவது பராக்கிரமபாகு அரசனுக்குப் பின்னர் அரிசியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்த என்னை விவசாயத்தை விரும்பாதவர் எனக் கூறுவது அடிப்படை அற்றது. டீ. எஸ். சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன காலத்திலேயே அந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்றும் கூறினார்.

600 ஏக்கரில் அமைக்கப்படும் பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் தற்போது நாட்டில் அமைக்கப்படும் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயமாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் 4000 ஏக்கர் முதலீட்டு அபிவிருத்தி வலயமாக திருகோணமலையிலும் 5000 ஏக்கரில் ஹம்பாந்தொட்டையிலும் 10000 ஏக்கரில் மொனராகலையிலும் முதலீட்டு அபிவிருத்தி வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனில், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஏற்றுமதியாளர்களினதும் முதலீட்டாளர்களினதும் நம்பிக்கையை வென்றுள்ளது. அதனூடாக ஏற்றுமதி மற்றும் முதலீடுகளின் ஊடாக நாட்டின் எதிர்காலப் பயணத்தை வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையினுள் இவ்வாறான தொழில்சாலைகள் அமைக்கப்படுவதன் ஊடாக அதிகளவான அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள வழி ஏற்படும் என நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்சித் மத்துமபண்டார, ஜே. சீ. அலவதுவல, நளின் பண்டார ஆகியோருடன் பெருமளவான அரச அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.