மலையகத்தில் தொடரும் போராட்டங்கள்(காணொளி)

350 0

up-countryதோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது தொடர்பில், முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை எதுவும் விடாத செயற்பாட்டின் மூலம், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தோட்டத்தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நுவரெலியா லிந்துலை நகரில் நேற்று தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் நடாத்தியபோதே தொழிலாளர்கள் இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள்,
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்டது.

எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா லிந்துலை நகரில், 8ற்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மைக்கு பாதணி மாலையிட்டு எரியூட்டினர்.

தோட்ட தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனம் ஏமாற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் துணைப்போகும் என்றால் தொழிற்சங்கங்களையும் இவ்வாறே எரியூட்டுவோம் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் தீ வைக்கப்பட்ட உருவ பொம்மையை லிந்துலை பொலிஸார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதேவேளை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என பொலிஸாரால் அறிவித்த போதும் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் அம்புலன்ஸ் வண்டியை மட்டும் செல்ல அனுமதித்த தொழிலாளர்கள் ஏனைய வாகனங்களை செல்லவிடவில்லை.

சுமார் 1 மணி நேரம் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸ் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும், அவர்கள் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று தலவாக்கலை தொழிற்சாலைக்கு அருகிலும் அத்தோட்ட மக்கள் வாகன நெரிசலை ஏற்படுத்தாது போராட்டத்தை நடத்தினர். அதேபோன்று தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்களும் தலவாக்கலை நகரசபைக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தலவாக்கலை கிறேட்வெஸ்டன், கல்கந்தவத்தை ஆகிய தோட்டங்களிலும் மெராயா தங்ககலை, ஊவாக்கலை ஆகிய தோட்டங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

ஹட்டன் பிரதேசத்தில் வட்டவளை மற்றும் குயில்வத்தை ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்களின் போராட்டமானது ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை அண்மித்தே இடம்பெற்றது.

மேலும் பொகவந்தலாவ, நோர்வூட், பத்தனை குயின்ஸ்பெரி, சாமிமலை கவரவில் என பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று நுவரெலியா பகுதியில் நானுஓயா தோட்டப்பகுதிகளிலும் 8வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.