சட்டவிரோத துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் கைது

260 0

ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் இவ்வருட முதல் இரு மாதங்களில் அறுபத்தைந்து சட்ட விரோத துப்பாக்கிகளும் அதற்குரிய சன்னங்கள் பெருந்தொகையுடன் மீட்கப்பட்டு ஐம்பத்தெட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 43 துப்பாக்கிகளும்,மொனராகலை மாவட்டத்தில் 22 துப்பாக்கிகளுமாக 65 சட்ட விரோத துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் ஜகத் பலியக்காரவுடன் அவரது பதுளை அலுவலகத்தில் நேற்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடும் போதே அவரின் மூலமாக மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.

அவர் தொடர்ந்து கூறுகையில், “எமக்கு கிடைக்கப்பெற்ற நேரடி மற்றும் அனாமதேயத் தகவல்களின் அடிப்படையில் இருமாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்புத் தேடுதல்களின் போது பதிவு செய்யப்படாத நிலையிலான சட்ட விரோத துப்பாக்கிகள் 65 மீட்கப்பட்டன. இத்துப்பாக்கிகளின் உரிமையாளர்களென்று கருதப்படும் 58 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுமுள்ளனர். 

இவர்களுக்கெதிராக இரு மாவட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை,சேனைப்பயிர்ச்செய்கை ஆகியவற்றை மிருகங்களிடமிருந்து பாதுகாக்கவே இத் துப்பாக்கிகளை தாம் பயன்படுத்துவதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.

2019ல் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இருமாதங்களிலேயே இத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருக்கின்றன” என்று கூறினார்.